தேவையான மழைவீழ்ச்சி கிடைத்தும் எவருமே மழைநீரைச் சேமிக்கவில்லை. இயன்றளவு மழைநீரை கடலுக்கு அல்லது தமது பிரதேசங்களிலிருந்து அப்புறப்படுத்தி விடுவதிலேயே சகலரும் குறியாக இருக்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும்.
இவ்வாறு யாழ்ப்பாணம் திருநெல்வேலி யிலுள்ள வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த வருடங்களைவிட இந்த வருடம் தேவையான அளவு மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. ஆனால் அதைச் சேகரிப்பதற்கான திட்டம் இல்லை. மழை நீரைச் சேகரிக்காவிடின் அது தன்பாட்டில் கடலைச் சென்றடைந்துவிடும். பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கினால் அத்தகைய இடங்களை மண் கொண்டு நிரப்பிவிடுகின்றனர். அல்லது அந்த இடத்திலிருந்து வாய்க்கால் வெட்டியோ ஏதாவது வழிமுறைகளைக் கையாண்டோ அந்த இடங்களிலுள்ள தண்ணீரை அகற்றிவிடுகின்றனர்.
இந்தநிலை ஆரோக்கியமானதல்ல.
வெள்ளவாய்க்கால்களை தார் வீதியாகவும் கொங்கிறீற் வீதியாகவும் மாற்றி அமைக்கின்றனர். அதற்குரிய பொறிமுறை போதவில்லை. அதனால் மழை நீர், வெள்ள நீர் தேங்குவது தடைப்படுகிறது.
வெள்ளவாய்க்கால்களுக்கு அடித்தளத்துக்கு கொங்கிறீற் போடப்படுகிறது. சாதாரண வெள்ளவாய்க்கால் ஊடாகத் தண்ணீர் பாயும்போது தரைப் பகுதியான நிலம் தண்ணீரை மண்ணுக்குள் ஊடுபுகவிடுகிறது. அப்படி குறிப்பிட்டளவு தண்ணீர் ஒவ்வொரு வெள்ளவாய்க்கால் ஊடாகவும் மண்ணுக்குள் ஊடுபுகவிடப்படுகிறது.
ஆனால் தற்போது வெள்ள வாய்க்கால்களின் அடித்தளத்துக்கு கொங்கிறீற் இடுவதால் மழை நீர் நிலத்துக்குள் ஊடுபுகுவது தடைப்படுகிறது. அதனால் எமக்குத் தண்ணீர் கிடைக்காமல் போகிறது.
தண்ணீரை நிலம் தன்பாட்டில் சேகரிப்பதைக்கூட நாங்கள் கொங்கிறீற் மூலமாகத் தடுத்துவிடுகிறோம். அறிந்தோ அறியாமலோ இந்தத் தவறைச் செய்துகொண்டிருக்கிறோம். இந்த முறையை கிராம மக்கள் தொடக்கம் அனைவருமே கைவிடவேண்டும்.எனவே இந்த விடயத்தில் அதிகாரிகள் மட்டுமன்றி கிராம மக்களும் சிந்தித்து உணர்ந்து செயற்படவேண்டும்– என்றார்.