சசிகலா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 14-ந்தேதி தீர்ப்பு? சுப்ரீம் கோர்ட்டு
சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை இறுதி தீர்ப்பு வர உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 1991 முதல் 96 வரை ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதில் ஜெயலலிதாவுடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சுமார் 18 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி குன்கா தீர்ப்பு கூறினார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. இதே போல் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பை எதிர்த்து மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந்தேதி இறுதி வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இப்போது இந்த வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை (14-ந்தேதி) இறுதி தீர்ப்பு வர உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்து விட்டதால் அவரை இந்த வழக்கில் இருந்து நீக்கி விட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் மீது இறுதி தீர்ப்பு கூறப்படும் என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.