ஜனநாயக தேசிய முன்னணியுடன் கைகோர்க்கும் சந்திரிகா
ஜனநாயக தேசிய முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் தனித்து இயங்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையில் நாளைய தினம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவுக் கட்சிகளுக்கும் இடையில் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளது.
இவ்விரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்திருக்கிறது.
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியுதீனைத் தலைவராகக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாட்டலி சம்பிக ரணவக தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதுடன், அவையனைத்தும் ஒன்றிணைந்து ஜனநாயக தேசிய முன்னணி என்ற பெயரில் செயற்பட்டு வந்தன.
இந்நிலையில் இக்கட்சிகள் அனைத்தும் இணைந்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகவே சஜித் பிரேமதாச களமிறக்கப்பட்டிருக்கின்றார். அ
ந்தவகையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அதன் ஆதரவுக் கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்தாகின்றது.