தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையி லான சந்திப்பு கொழும்பிலுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் நிலைமைகள் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என இணக்கம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், ஊழல், மோசடிகள் குறித்து தெரிவுக்குழு அமைக்கப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பிரேரணை, அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட எந்தவொரு செயற்பாடுகளையும் தற்போதைக்கு முன்நகர்த்துவதில்லை எனவும் இந்தச் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது
சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாண முதலமைச்சருடனான சந்திப்பு நட்பு ரீதியாக நடைபெற்றிருந்தது. இந்தச் சந்தப்பின்போது வடக்கு மாகாண சபையில் அண்மையகாலத்தில் ஏற்பட்டிருந்த நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்திருந்தோம். குறிப்பாக, வடக்கு மாகாண சபையில் இடம்பெற்றிருந்த விடயங்கள் குறித்து முதலமைச்சர் எனக்கு போதியளவிலான விளக்கங்களை வழங்கியிருந்தார்.
அதனையடுத்து இந்த விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் சந்தித்துக் கலந்துரையாடி முடிவை எடுப்பதென்ற இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். இந்தச் சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளது.
அதுவரையில் வடக்கு மாகாண சபையில முன்மொழிவு செய்யப்பட்டுள்ள பிரேரணை உள்ளிட்ட இதர விடயங்கள் தொடர்பில் எவ்விதமான கருமங்களையும் முன்நகர்த்துவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” – என்றார்.
இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சரால் இந்தச் சந்திப்பு குறித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள கூட்டு அறிக்கையிலும் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.