பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தியில் உள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அண்மையில் நடத்தப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்போது சில முக்கிய தீர்மானங்களை பிரதமரே எடுத்திருப்பதாகவும், அதனால் ஜனாதிபதி அதிருப்தியடைந்திருப்பார் என தாம் நினைப்பதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் திகதி மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை இன்னும் ஓரிரு வாரங்களில் முழுமைப்படுத்த அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை அண்மையில் ஊடகவியலாளர் ஒருவருக்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த விடயம் தொடர்பாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் இதன்போது வினவினர்.
இதற்கு பதிலளித்த அவர், கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் இந்த நடவடிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறினார்.