உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றது. பாரதூரமான இந்த விடயத்தில் இருந்து ஓடிவிட முடியாது.
இவ்வாறு தெரிவித்தார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நேற்றுச் சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
எனக்குச் சட்டம் ஒழுங்கு அமைச்சின் மூலமும், இராணுவத்தின் மூலமும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான தகவல்கள் கிடைத்தன. காத்தான்குடியில் அடிப்படைவாதம், தீவிரவாதம் இருந்தன என்பதை நான் அரசியல்வாதி என்ற ரீதியில் அறிவேன்.
துருக்கி அமைப்பு ஒன்று இங்கு இருக்கின்றது என்று எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால் அவர்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று சொல்லப்படவில்லை.
தேசிய பாதுகாப்புச் சபையில் அரச தலைவர், தலைமை அமைச்சர், முப்படைத் தளபதிகள், பாதுகாப்புச் செயலர், தேவைப்படின் அயலுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் இருப்பர். கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் பாதுகாப்புச் சபை கூட்டப்படவில்லை. ஆர்ப்பாட்டம், போராட்டங்கள், அடிப்படைவதாம், புலிகளின் மீளெழுச்சி என்பன பற்றிக் கூறப்பட்டிருந்தாலும், பயங்கரவாதம் பற்றி என்னிடம் கூறப்படவில்லை.
தீவிரவாத விசாரணைப் பிரிவு 2018ஆம் ஆண்டு ஸஹ்ரானைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது. அவர் நாட்டில் இருந்து வெளியேறிவிட்டார் என்று கருதியே அவரைக் கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சட்டம், ஒழுங்கு அமைச்சை நான் இருவாரம் மட்டும் வைத்திருந்தேன். பயங்கரவாத அமைப்புக்களைத் தடை செய்வதற்காக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதரசா பாடசாலைகள் தொடர்பாக ஒரு கட்டமைப்பு இருக்கவில்லை. வெளியில் இருந்து வந்த நபர்கள் தொடர்பாகத் தாக்குதலின் பின்னரே அறிந்து கொண்டடோம். அமைச்சரவையில் நாங்கள் இவை பற்றியெல்லாம் பேசியுள்ளோம்.
இது ஒரு பாரதூரமான பாதுகாப்புக் குறைபாடு. அரச புலனாய்வுத்துறைத் தலைவர் ஏதும் இருந்தால் என்னிடம் சொல்வார். ஆனால் இந்த விடயம் தொடர்பாக நான் அறியவில்லை.
ஜே.ஆர். ஆட்சியில் 83 ஆம் ஆண்டின் பின்னர் பாதுகாப்புச் சபை ஒரு வாரத்துக்கு ஒரு தடவை கூடியது. கலவர காலத்தில், போர்க் காலத்தில் இவ்வாறு சபை கூடியது. அரச தலைவர் இல்லாதபோது தலைமை அமைச்சர் சபையில் சபை கூடியது. சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் அவர் இல்லாதபோதும் கூடியது.
தாக்குதலின் பின்னர் பாதுகாப்புச் சபையை நான் கூட்டினேன். நான் பாதுகாப்பு அமைச்சுக்கு நேரே சென்று சபையைக் கூட்டினேன். பாதுகாப்புச் சபையின் சில கூட்டங்களுக்கு நான் அழைக்கப்படவில்லை. நான் அப்போது ஒத்துழைக்காது விட்டிருந்தால் சபையைக் கூட்டியிருக்க முடியாது. காலப்போக்கில் பாதுகாப்புச் சபை கூட்டப்படவில்லை என்பதை அறிந்தேன்.
காத்தான்குடியில் வெடிப்புச் சம்பவம் ஒன்று நடந்து என்று அறிந்தேன். அதுபற்றி விசாரித்துப் பார்க்கச் சொன்னேன். ஆனால் அதுதொடர்பான முழு விவரங்கள் கிடைக்கவில்லை. பாதுகாப்புத் துறையில் முறையான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால்தான் இப்படியான தெரிவுக் குழுவை அமைத்து ஆராயத் தீர்மானித்தோம்.
இந்தத் தவறுக்கு நாம் பொறுப்பேற்க முடியாது. அதிலிருந்து அரசு தப்பியோடிவிட முடியாது. இதைத்தான் நான் ஆரம்பத்திலேயே கூறினேன்.
இப்போதுள்ள சட்டங்கள் போதாது என்பதால் புதிய சட்டங்களைக் கொண்டுவர நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். சட்டம், ஒழுங்கு அமைச்சுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அனுபவம் வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்று நாம் கேட்டிருந்தோம்.
அடிப்படைவாதம் மூலம்மான் தீவிரவாதத்துக்குச் செல்கின்றனர். அதை எமது புலனாய்வுத் துறையினர் கண்டறிய வேண்டும். இந்த இரண்டுக்கும் இடையே உள்ள காலத்தை நாம் கணிக்க வேண்டும், அதைக் கண்டறிய வேண்டும். அதைக் கண்டறியாதமை புலனாய்வுத்துறையின் பாரதூரமனா குறைபாடு.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் புற்றுநோய் போன்றது. ஒன்று முடிந்துவிட்டது என்று நாங்கள் அமைதியாக இருந்துவிட முடியாது. நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். நினைக்க முடியாதவற்றைச் செய்வார்கள். ஆயுதம் என்பது துப்பாக்கி மட்டுமல்ல. கத்தி போன்ற சிறு ஆயுதங்களாவும், வாகனங்களால் மோதியும் கூட ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். நாம் கவனமாக இருக்க வேண்டும். – என்றார்.