பாக்கெட் செய்யப்பட்ட இட்லி, தோசை மாவுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இட்லி மாவு 18 சதவிகித வரி பிரிவில் வரும் நிலையில், இதை 12 சதவிகித பிரிவில் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வறுகடலைக்கான ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதோடு சாம்பிராணி, களிமண் சிலைகள், பிரார்த்தனை மெத்தை ஆகியவற்றுக்கான வரியையும் குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் எஸ்யுவி வகை கார்கள் மற்றும் சொகுசு கார்களுக்கு செஸ் வரி எனப்படும் மேல் வரியை அதிகரிக்க மத்திய, மாநிலங்களின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனால் இவ்வகை வாகனங்களின் விலை 15 முதல் 25 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 150 பொருட்களுக்கான வரியில் மாற்றம் செய்யக் கோரிக்கைகள் வந்துள்ள நிலையில் இவை குறித்து வரும் மாதம் ஐதராபாதில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.