கலப்புப் பொறிமுறைக்கு ஒருபோதும் இணங்காது இலங்கை! – ரணில் திட்டவட்டம்
“நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கு இலங்கை ஒருபோதும் இணங்காது. அத்துடன், சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திலும் இலங்கை இணைந்துகொள்ளாது.”
– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மேலும் கூறியவை வருமாறு:-
“இலங்கையில் நடைபெற்ற போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. இவை குறித்து விசாரணை நடத்தி அரசு பொறுப்புக்கூற வேண்டும். இதற்கு இலங்கையும் இணக்கம் வெளியிட்டுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட யோசனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த யோசனையின் பிரகாரம் செயற்பட்டு சர்வதேச சட்டத்தின் பிரகாரம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நீதிபதிகளை அழைத்து விசாரணை நடத்துவதற்கு நாம் ஒருபோதும் இணக்கம் வெளியிடவில்லை. அவ்வாறான
யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கவுமில்லை. இணை அனுசரணை வழங்கவுமில்லை. அதற்கு அரசமைப்பில் இடமுமில்லை.
நல்லாட்சி அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட யோசனையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 19ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்கியமை, ஜனநாயகத்தைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்தமை உள்ளிட்ட விடயங்களுக்காகவே சர்வதேச தமது பாராட்டுகளை
தெரிவித்தது.
அத்துடன், ஊழல், மோசடி, இலஞ்சம், அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைக்கும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விடயமே எதிரணிக்கு குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது என்பது எனக்கு தெரியும்.
அதேவேளை, வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்குமாறு கூறப்படவில்லை. சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான நீதிப்பொறிமுறையை உருவாக்கும் இலங்கையின் யோசனைக்கு
ஆதரவு தெரிவிக்கப்பட்டது. தேவையேற்படின் சர்வதேச ஆலோசனையாளர்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். ரோம் உடன்படிக்கையில் நாம் கைச்சாத்திடவில்லை. எனவே,
சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் இணையவேண்டிதில்லை. நானும், ஜனாதிபதியும் இது பற்றி திட்டவட்டமாக அறிவித்துள்ளோம்” – என்றார்.