சிறிகொத்தாவில் பொதுஜன பெரமுனவிற்கு எதிராக ரணில் காட்டமான பேச்சு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதான போட்டி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலானதாகவே இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருப்பதற்கல்ல, ஆட்சியை கைப்பற்றுவதற்கே போட்டியிடுகிறது என்று ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
ஐ.தே.க.வை விட்டு யார் விலகிச்சென்றாலும் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் விலகிச் சென்றவர்கள் தொடர்பில் அக்கறை செலுத்தாது கட்சிக்குள் தற்போது இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டாலே போதும். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே தீர்வு காணமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று திங்கட்கிழமை கட்சியின் தொழிற்சங்கம் அமைப்புகளின் உறுப்பினர்களுடன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், உபத்தலைவர் ரவிகருணாநாயக்க, தொழிற் சங்கங்களுக்கான தலைவர் ரங்கே பண்டார ஆகியோர் எதிர்வரும் பொத்தேர்தலில் ஐ.தே.க. எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடினர். பின்னர் அவர்கள் முன்னிலையில் உரையாற்றிய போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.