Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை: ராஜிதவின் கருத்தால் தமிழர்கள் அதிர்ச்சி!

போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை: ராஜிதவின் கருத்தால் தமிழர்கள் அதிர்ச்சி!

“இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது ‘போர்க்குற்றங்கள்’ இடம்பெற்றதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு ஏதும் இடம்பெறவில்லை” என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட விசாரணை அறிக்கையில் போர்க்குற்றச்சாட்டுக்கள் என்று கருதக்கூடியயளவிலான மனித உரிமை மீறல்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் நிகழ்த்தப்பட்டதற்கு நம்பகரமான சாட்சிகள் இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு யாழ்ப்பாணத்தில் திடீரென போர்க்குற்றங்களே இடம்பெறவில்லை என்று மறுத்திருப்பது தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்திருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்றுமுன்தினம் யாழ்ப்பாஇணம் சென்றிருந்த அமைச்சர் ராஜித, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுடன் பேசினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை. அவ்வாறு இடம்பெற்றன என்று நாங்கள் ஏற்றுக்கொள்ளவுமில்லை. போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளும் தேவையற்றவை. போர்க்குற்ற விசாரணைகள் என்கின்றபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்களை விசாரிப்பது யார் ? அவர்களில் யாரை விசாரிப்பது? அவர்களின் தலைவர்கள் இருக்கின்றனரா?

அப்படியாயின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த தயா மாஸ்டார் (ஊடகவியலாளர் சந்திப்பில் அவரும் கலந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்தபடியேதான் பேசினார்) போன்றவர்களைத்தான் கேட்க வேண்டும். போர்க்காலப் பகுதியில் சில குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதற்காக சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளும் நடைபெறுகின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கால அவகாசம் பற்றிச் சிந்திக்கும் காலம் முடிந்துவிட்டது. தற்போது கிடைத்துள்ள 2 வருடங்கள் கால அவகாசத்துக்குள் அரசு ஒப்புக்கொண்ட அனைத்து விடயங்களையும் செய்து முடிக்கவேண்டும். இந்தக் கால அவகாசப் பகுதியில் சகலருக்கும் சமமான உரிமைகள் கிடைக்கக்கூடிய வகையில் தீர்வொன்றைக் காண்போம்.

மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் அபிவிருத்திகளை அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களே செய்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு என்ன உரிமைகள் இருக்கின்றதோ அத்தனை உரிமைகளும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்படும். இந்த நாட்டில் வாழும் அனைவரும் இலங்கையர்கள் என அடையாளப்படுத்தப்படுவார்கள்” – என்றார்.

அவரது இந்த அறிவிப்பு தேசிய அரசு மீது தமிழ் மக்கள் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தகர்த்தெறிந்துவிட்டது என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

“வைத்தியசாலைகள் மீதும், போர் தவிர்ப்பு வலயம் மீதும் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில் தமது சொந்தங்களை இழந்தவர்களும் தாமே பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளாக வாழும்போது போர்க்குற்றம் ஏதும் நிகழவில்லை என்று அமைச்சர் எப்படிக் கருத்துத் தெரிவிக்க முடியும்?” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

“நாட்டின் ஜனாதிபதிகள் நியமித்த ஆணைக்குழுக்களின் முன்பாகவே போர்க்குற்றங்கள் நிகழ்ந்ததற்கான சாட்சிகளை மக்கள் நேரில் தெரிவித்திருக்கின்றார்கள். இராணுவத்தினரிடம் நேரில் கையளிக்கப்பட்டவர்கள் பின்னர் காணாமல்போயுள்ளார்கள். அதற்கும் சாட்சிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் இன்றும் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றார்கள். சட்ட ரீதியாகவும் போராடி வருகின்றார்கள். அப்படியிருக்கும்போது போர்க்குற்றங்களே நடக்கவில்லை என்று எழுந்தமானமாக எப்படி ஒரு பொறுப்பான அமைச்சர் பதிலளிக்க முடியும்? இத்தகையவர்களிடம் இருந்து நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது” என்று வடக்கிலுள்ள அரசியல் அவதானிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …