Friday , November 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கேப்பாப்பிலவு பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வுகாண முடியாது;அரசாங்கம்

கேப்பாப்பிலவு பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வுகாண முடியாது;அரசாங்கம்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிரதேசத்தில் மக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலமீட்பு போராட்டக் கோரிக்கைக்கு விரைவில் அரசாங்கம் தீர்வைப்பெற்றுக் கொடுக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார்.

கடந்த காலங்களில் காணிகள் விடுவிக்கப்படாத போதிலும் போராட்டங்கள் இடம்பெறவில்லை. ஆனால் இன்று காணிகள் இயன்றளவில் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் போராட்டங்கள் வெளிக்கிளம்ப ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
கேப்பாப்பிலவு மக்களினால் கடந்த 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலமீட்பு போராட்டம் இன்று தொடர்ச்சியாகவும் இடம்பெற்றுவரும் நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக இதன்போது ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, கடந்த காலங்களில் காணிகள் விடுவிக்காதபோது போராட்டங்கள் இடம்பெறவில்லை. இன்று படிப்படியாக மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் போராட்டங்களும் இடம்பெறுகின்றன. காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுதான் வருகின்றன. ஒரே இரவில் அதனை செய்துமுடித்துவிட இயலாது. கிரமமாகவே அதனை செய்துமுடிக்க முடியும். இரணும் வசமிருந்த பல காணிகள் விடுவிக்கப்பட்டுவருகின்றன” என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன, கேப்பாப்பிலவு மக்கள் கேட்டுவரும் காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமானவையாகும். இதுகுறித்து விமானப்படை மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவினர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம்” என்று தெரிவித்தார்.

எனினும் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் அந்தக் காணிகள் மக்களுடையதாக இருந்த நிலையிலேயே வனஜீவராசிகள் மீட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அவை மக்களுடைய காணிகளாகவே உள்ளன. எனவே அரசாங்கம் அதனை எப்போது திரும்ப உரியவர்களிடம் வழங்கும் என்று ஊடகவியலாளர்கள் வினா எழுப்பினர்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, யுத்தத்தின் பின்னர் எமது மக்கள் அங்குசென்று அனுமதியின்றி குடியேற்றங்களை மேற்கொள்வார்கள். இதனால்தான் வனஜீவராசிகள் திணைக்களம் விரைந்து செயற்பட்டு அந்தக் காணிகளை பாதுகாத்து வருகின்றது. விரைவில் அந்தக் காணிகளை உரியவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன, அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …