ராஜபக்ஷர்கள் திருடர் கூட்டம்- பொன்சேகா
எதற்கெடுத்தாலும் இன்று அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை சுட்டிக்காட்டுவதுடன், என்ன பிரச்சினை இருந்தாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தான் அவற்றை தீர்க்க முடியாமல் இருப்பதாக அரசாங்கம் கூறுவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அது பொய் என்றும் திருட்டு வேலைகளை செய்யவே இந்த பெரும்பான்மை பலத்தை அவர்கள் கேட்பதாகவும் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இதனை தெரிவித்தார்.
மிக் விமானங்களை கொள்வனவு செய்வதாக உதயங்க வீரதுங்க நாட்டையும் மக்களையும் ஏமாற்றியது போல் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஊழல் செய்து மக்களை ஏமாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இவர்கள் ராஜபக்சமாருக்கு நெருக்கமானவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மனித நேயமுற்றவர்கள் பற்றி இன்று மைத்ரிபால சிறிசேன பேசுகிறார் என்றும், ஆனால் அவர் என்னவிதமான வகையில் மனிதநேயத்துடன் செயற்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும் எனவும் சரத் கூறியுள்ளார்.
அத்துடன் சவேந்திர சில்வாவுக்கு பிரயாணத் தடை விதிக்கப்பட்டதை பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறார்கள் என்றும், ஆனால் அவருக்கு முன்னர் தனக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டபோது ஜெயவேவா போட்டவர்கள் இப்போது முதலைக்கண்ணீர் வடிக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே அந்த பயணத் தடை குறித்து நான் எனது கண்டனத்தை தெரிவிக்க விரும்புகிறேன் எனக்கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ,அதை ஏற்க முடியாது எனவும் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.