வட.கிழக்கு பட்டதாரிகளின் போராட்டம் முடிவின்றி தொடர்கிறது
பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து தம்மை கல்வி கற்க வைத்த பெற்றோர் இன்று தாம் வேலைவாய்ப்பு இல்லாமல் நடு வீதிகளில் நின்று போராடுவதை எண்ணி வேதனை அடைவதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கல்விகற்ற தாம் இன்று தொழில்வாய்ப்பை பெறமுடியாமல் பலரின் ஏழனத்திற்கு உள்ளவாது வேதனையளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று 12 ஆவது நாளாக யாழ்ப்பாணம் – அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இரவு பகலாக தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுக்கும் தாம் அரசாங்கத்தின் மீது தமிழ் அரசியல் தலைமைகள் மீதோ நம்பிக்கை வைக்க வேண்டுமானால் தமது போராட்டத்திற்கு சாதகமான பதில் கிடைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகளும் வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி இன்று 9 ஆவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் தமக்கான நிரந்த வேலைவாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




