காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட அறவழிப் போராட்டம் நேற்றுடன் 100ஆவது நாளை எட்டியுள்ளது. எனினும், இதுவரையில் அரசிடமிருந்து அவர்களுக்கு உருப்படியான பதில் ஏதும் வழங்கப்படவில்லை.
அரசின் பராமுகத்தை – புறக்கணிப்பைக் கண்டித்து கிளிநொச்சியில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்திருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நேற்று கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். அதேவேளை, பொதுமக்கள், பொது அமைப்பினர், அரசியல்வாதிகள் எனப் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவைத் தெரிவித்தனர்.
கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதியை அறியவும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சிப் போராட்டம் நேற்று 100ஆவது நாளை எட்டியுள்ளது. வவுனியா போராட்டம் 97ஆவது நாளையும், முல்லைத்தீவுப் போராட்டம் 85ஆவது நாளையும், யாழ்ப்பாணம், மருதங்கேணிப் போராட்டம் 79ஆவது நாளையும், கிழக்கில் திருகோணமலைப் போராட்டம் 89ஆவது நாளையும் எட்டியுள்ளது.
கிளிநொச்சியில் போராட்டம் இடம்பெற்றுவரும் கந்தசுவாமி ஆலய முன்றலில் காலை 10.30 மணியளவில் சர்வமதப் பிரார்த்தனை நடைபெற்றது. அதன் பின்னர் ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உணர்ச்சி மேலீட்டால் ஏ – 9 பிரதான வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ஏ – 9 வீதியின் இருவழிப் பாதைகளையும் முடக்கும் வகையில் நடு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஏ – 9 வீதியின் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது.
முன்னதாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் என்றும், இதனால், இந்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் வலியுறுத்தி, கிளிநொச்சி பொலிஸாரால் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், நீதிவான் நீதிமன்றம் அதனை நிராகரித்ததுடன், பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.
நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட நோட்டீஸில், “உங்களால் கிளிநொச்சி நகரிலுள்ள அமைப்பொன்றின் சார்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றுகூடுவதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் அரசமைப்பில் தங்களுக்குள்ள உரிமையை நீதிமன்றம் மதிக்கின்றது. அதேவேளை, தங்களுடைய ஆர்ப்பாட்டத்தின்போது ஒழுங்குக்கும், பொதுமக்களின் நலனுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தங்களது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க அறிவுறுத்தப்படுகின்றீர்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தால் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என்றெண்ணி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடிய பகுதியிலும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் நிலையம் போன்ற இடங்களிலும் பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு கிளிநொச்சி நகரின் பாதுகாப்பு நேற்றுப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
“எங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி நாங்கள் கடந்த எட்டு வருடங்களாக பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். எந்தவித பதில்களும் கிடைக்காத நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம். இந்த ஆர்ப்பாட்டம், இன்று (நேற்று) 100ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், எங்களுக்கான எந்தவொரு தீர்வும் வழங்காது எங்களது போராட்டங்களைத் தொடர்ந்து நீடிக்கவிட்டு, நல்லாட்சி அரசும் அரசியல் தலைமைகளும் வேடிக்கை பார்க்கின்றனர்” என்று நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
ஏ – 9 வீதி முடக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி நீதிவான், மாவட்ட மேலதிக செயலாளர், சட்டத்தரணிகள் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரொன்றை கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளரிடம் கையளிக்குமாறு நீதிவான் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் மனு கையளிக்கப்பட்ட நிலையில், குறித்த மனுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் உறுதியளித்தார்.
“ஜனாதிபதி செயலகத்தால் வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக எமக்கு மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்க இரு வாரங்கள் அவகாசம் தேவையாகவுள்ளது. அதற்குள் உறவினர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து தமது கோரிக்கைகள் தொடர்பில் தெரிவிப்பதற்கான சந்திப்பும் ஏற்பாடு செய்யப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இரண்டு வாரங்கள் அமைதி காக்கவும்” என்று கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.சத்தியசீலன் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இரண்டு வார கால அவகாசம் ஜனாதிபதி செயலகத்தால் கோரப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
அதனையடுத்து, ஏ – 9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வீதியை விட்டு விலகி கிளிநொச்சி கந்தசுசாமி ஆலய முன்றலில் வழமையான தமது போராட்டத்தைத் தொடர்கின்றனர்.