கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை வீதியில் நிர்க்கதியாக்கியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இராணுவத்தினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விமானப்படையினர் விடுவிக்க வேண்டும் என கோரி கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேப்பாபுலவு பிலவுகுடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையிலே, இன்று காலை கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 9.45 மணியளவில் கிளிநொச்சி பொது சந்தை கட்டடத்தில் கிளிநொச்சி வர்த்தக சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.