“சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பொது எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது” என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
15 காரணங்களை உள்ளடக்கி ராஜித சேனாரத்னவுக்கு எதிராக 39 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை பொது எதிரணி கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பித்திருந்தது. அதற்குப் பதிலளித்திருந்த ராஜித சேனாரத்ன, ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையல்ல 100 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலும் தனது போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது என்றும், ராஜித மீது சேறு பூசுவதற்காகவே பொது எதிரணி இவ்வாறான செயல்களைச் செய்வதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.