Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை அரசுக்கு அழுத்தம் தொடரும்! – இலங்கைத் தமிழரை இந்தியா கைவிடாது என சம்பந்தனிடம் சுஷ்மா உறுதி 

நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை அரசுக்கு அழுத்தம் தொடரும்! – இலங்கைத் தமிழரை இந்தியா கைவிடாது என சம்பந்தனிடம் சுஷ்மா உறுதி 

“இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழவேண்டும். நிரந்தர அரசியல் தீர்வே இந்த நிலைமையை ஏற்படுத்தும். எனவே, நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.”
– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா  சுவராஜ்.
“இலங்கைத் தமிழர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது” எனவும் வாக்குறுதியளித்தார்.
கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு நடைபெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு கொழும்பில் பிரதமரின் உத்தியோகபூர்வமான செயலகமான அலரி மாளிகையில் நேற்று மாலை ஆரம்பமானது. நேற்றும் இன்றும் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்றுப் பிற்பகல் தனி விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இதையடுத்து, அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.
இந்தக் கருத்தரங்கில் சுஷ்மா சுவராஜ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி வின்சென்ட் மெரிடன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அம்பாந்தோட்டையில் எந்த வெளிநாட்டு இராணுவத் தளமும் அமைக்கப்படாது என்று தெளிவாகக் கூறினார்.
அத்துடன், இந்தியப் பெருங்கடல் அபிவிருத்தி நிதியம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தக் கருத்தரங்கில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இரண்டாவது வரிசையிலும், வெளிவிவகார அமைச்சின் செயலர் பிரசாத் காரியவசம், ஜனாதிபதியின் செயலர் ஒஸ்ரின் பெர்னாண்டோ  போன்றவர்கள் மூன்றாவது வரிசையிலும் அமர்ந்தனர்.
இந்தக் கருத்தரங்கில் 35 நாடுகளைச் சேர்ந்த 150 இற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
நேற்று முதலாம் நாள் கருத்தரங்கு நிறைவடைந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இராப்போசனத்துடன்  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா  சுவராஜ் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பில் புதிய அரசமைப்பு, ஐ.நா. தீர்மானம் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தன் எடுத்துரைத்தார்.
சம்பந்தனுடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் கலந்துகொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.
சந்திப்பின் நிறைவில் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை சுஷ்மா  சுவராஜ் தெளிவுபடுத்தினார்.
இந்தச் சந்திப்பில் சுஷ்மா  சுவராஜுடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோரும்  பங்கேற்றனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …