ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை புறக்கணிப்பது ஏன் ?
ஜூன் 2 ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருளியல் பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணியில் தமிழரோ அல்லது முஸ்லிமோ உறுப்பினராக இல்லை. அந்த மாகாணத்தின் சனத்தொகையில் தமிழர்களும் , முஸ்லிம்களும் சேர்ந்து மூன்றில் இரண்டு பகுதியினராக வாழ்கின்றபோதிலும் ,அந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஜனாதிபதி செயலணியில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை.
இரண்டாவதாக ,அந்த செயலணியில் பல சிங்கள பௌத்த பிக்குமார்கள் இருக்கின்றனர்.ஆனால் ,இந்து சமயத்தினரோ அல்லது இஸ்லாத்தினரோ பிரதிநிதியாக இல்லை.மூன்றாவதாக ,செயலணி பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் தலைமைத்துவத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன செயலணியின் தலைவராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்திசேனநாயக்க செயலணியின் செயலாளராகவும் இருப்பர்.
இந்த செயலணி மாநாயக்கர்கள் உட்பட பௌத்த ஆலோசனை கவுன்சிலின் சிந்தனையில் உதித்ததாகும்.இன்னும் ஓரிருமாதங்களில் நடத்தப்படவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் சிங்கள பௌத்த வாக்காளர்கள் மீதான ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதிக்க பிடியை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டதே இதுவென்று தோன்றுகின்றது. ஒரு முன்னாள் மேஜர் ஜெனராலான பாதுகாப்பு செயலாளரை செயலணியின் தலைவராக நியமித்ததன் மூலம் செயலணியினால் மேற்கொள்ளப்படக் கூடிய எந்த தீர்மானமும் இராணுவ பாணியில் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அரசியல் செய்தி சொல்ப்படுறது.
கோத்தாபயவின் அரசாங்கம் மெய்யான ஆர்வத்துடன் செயற்படுகின்றது என்ற நம்பிக்கையை இது சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கு கொடுக்கின்றது. சுதந்திரத்திற்கு பின்னரான காலக்கட்டத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் தங்களது ‘பாரம்பரிய தாயகமாக’ வடக்கு கிழக்கை தமிழ் தேசிய வாதிகள்(விடுதலை புலிகள் ஆதரவு ஈழம் வாதிகள் மாத்திரமல்ல) கருதுவதன் காரணத்தினால் ஒரு கடும்போக்கைக் காட்டவேண்டியது அவசியமானது என்று இந்த சிங்கள தேசிய வாத சக்திகள் நம்புகின்றன.