தமிழ்த் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினத்தை நாங்கள் இவ்வாறு கொண்டாடுவது தென்னிலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் தான் நாங்கள் இவ்வாறு கொண்டாடுகின்றோம். இது சட்டவிரோதமான நிகழ்வு அல்ல என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த இடத்தின் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பிறந்த நாள் கொண்டாட்டம், மர நடுகை நிகழ்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட அறிவிப்பு ஆகியவற்றுக்குப் பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கார்த்திகை வீரர்கள் தினம் என ஜே.வி.பி.யினால், அவர்களின் தலைவரின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க இந்த நாட்டில் முடியும் எனில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முடியுமெனில் எங்களாலும் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாட முடியும் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இனி ஒவ்வொரு வருடமும் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிவயோகன், தர்மலிங்கம் மற்றும் பொது மக்கள் , சிறார்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.