தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்திருந்ததென மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு என்று வரும் போது இந்தியாவின் காஷ்மீரில் நடந்த நிலைமையைக் கருத்தில் கொண்டே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவற்றைப் புரிந்து கொண்டே அரசியல் தீர்வுத் திட்டத்தை தேட வேண்டும். ஆனால் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வைக் காண்பேன்.
அரசாங்கத்தைக் காப்பாற்றுவதை மட்டுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்கின்றது. வேறுஎதனையும் பெற்றுக்கொள்ள வில்லை. தீர்வையும் பெறவில்லை.
அபிவிருத்தியையும் பெறவில்லை. கூட்டமைப்பு எவ்வித அர்த்தமும் இல்லாத பணியைச் செய்கின்றது.
வடக்கு-கிழக்கிற்கு வீதியை, பாடசாலையை, இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவில்லை. எதையுமே மக்களுக்குப் பெற்றுக் கொடுக்காமல் அரசாங்கத்தை ஆதரித்தனர்.
மாறாக அவர்கள் தமக்கு பலவற்றை பெற்றுக்கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவேன். இதற்கு எனக்கு இரண்டு வருடங்கள் தேவைப்படும்.
அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வைக் காண முடியும். அதற்கான சக்தியும் பலமும் எம்மிடம் இருப்பதாக நான் கருதுகின்றேன்.
அரசியல் தீர்வுக்காக தமிழ் மக்களுடனேயே பேச்சுவார்த்தை நடத்துவேன். தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராகவே இருக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.