“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்.”
– இவ்வாறு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுக்களிலும், அமைதி முயற்சிகளிலும் நடுநிலையாளராகப் பங்கேற்ற எரிக் சொல்ஹெய்ம், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் கொண்டிருந்த உறவு, நட்பு ரீதியானதா அல்லது அதனை விடவும் அதிகமானதா என்று இந்திய ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துள்ள எரிக் சொல்ஹெய்ம்,
“உலகிலுள்ள வேறெந்த வெளிநாட்டவரையும் விட, பிரபாகரனை நான் அதிகமாக – அடிக்கடி சந்தித்திருக்கிறேன். அவர் தமிழ் மக்களைப் பொதுவாகச் சந்திப்பது வழக்கம்.
இலங்கையின் முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவை பிரபாகரன் ஒருமுறை சந்தித்திருக்கிறார். சில சிங்களவர்களையும் சந்தித்திருக்கிறார். ஆனால், தமிழ் மக்களை அவர் எப்போதும் சந்தித்து வந்தார்.
அவருடன் இன்னும் கூடுதலான நேரத்தை செலவிட்டிருந்தால், நாம் பெரும்பாலும், அவர் மீது இன்னும் செல்வாக்குச் செலுத்தியிருக்க முடியும்.
பிரச்சினைகள் பற்றி பேசுவதன் மூலம் அவருடன் தனிப்பட்ட உறவை ஏற்படுத்த நாங்கள் முயன்றோம். அவர் உண்மையில் அதுபற்றி அக்கறை கொண்டிருந்தார்.
அவர் நிச்சயம் திரைப்படங்களில் ஆர்வம் கொண்டிருந்தார். உணவு விடயத்தில், அவர் ஒரு நல்ல சமையற்காரராக அறியப்பட்டார். இயற்கை மீது ஆர்வம் கொண்டிருந்தார்.
ஆனாலும், தனிப்பட்ட உறவை வளர்ப்பது கடினமாக இருந்தது. ஏனென்றால், எமக்கு மட்டுப்படுத்தப்பட்ட நேரமே இருந்தது. மேலும், இலங்கை அரசால் வடக்குக்குச் செல்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை.
அதைவிட, மொழித் தடையும் இருந்தது. அவர் தமிழில் பேசுவதை புரிந்துகொள்ள எமக்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார்.
இறுதியாக அவர் வெளிப்படையாக திறந்தநிலையில் இல்லாத பாத்திர வகையாகவே இருந்தார்.
கவர்ச்சிகரமானவராக, ஆனால், இன்னும் அதிகம் கூடிய, எச்சரிக்கையுடன் அவர் இருந்தார்” – என்று குறிப்பிட்டுள்ளார்.