வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு-ஷோ நடத்த திட்டம்: பதிலடி கொடுக்க அகிலேஷ்-ராகுல் முடிவு
பிரதமர் மோடி வாரணாசியில் ரோடு-ஷோ நடத்த திட்டமிட்டு வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்க அதே பகுதியில் அதே மாதிரி ரோடு-ஷோ நடத்த ராகுல் மற்றும் அகிலேஷ் இருவரும் முடிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று 5-வது கட்ட தேர்தல் நிறைவு பெறும் நிலையில் மார்ச் 4-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலும் 8-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது.
7-ம் கட்ட தேர்தலின் போது வாரணாசி தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதி பிரதமர் நரேந்திரமோடி வெற்றி பெற்ற பாராளுமன்ற தொகுதியாகும்.
வாரணாசி தொகுதியில் 2014-ம் ஆண்டு பெற்ற வாக்குகளை விட அதிக ஓட்டுகள் பெற்று விட வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மிகவும் தீவிரமாக உள்ளனர். இதற்காக வாரணாசி தொகுதியை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த வாரம் வாரணாசிக்கு வந்து அதிரடி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவரது பிரசார தேதி இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
என்றாலும் பிரதமர்மோடி வாரணாசியில் ரோடு-ஷோ நடத்த திட்டமிட்டு வருகிறார். பாதுகாப்புப் படையினர் ஒப்புதல் அளித்ததும் பிரதமர் மோடி வாரணாசியில் எந்த பகுதியில் ரோடு-ஷோ நடத்தப் போகிறார் என்பது தெரியவரும்.
ரோடு-ஷோ தவிர காசிவிசுவநாதர் ஆலயம் உள்பட சில கோவில்களுக்குச் செல்லவும் பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். மோடியின் இந்த புயல் வேக பிரசாரத்துக்கு உரிய பதிலடி கொடுக்க அகிலேஷ்-ராகுல் இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
வாரணாசியில் இன்று ராகுலும், அகிலேசும் ஒன்றிணைந்து தேர்தல் பிரசாரம் செய்யவும், ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் திடீரென அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
பிரதமர் மோடி ரோடு-ஷோ நடத்தி விட்டுச் சென்ற பிறகு அதே பகுதியில் அதே மாதிரி ரோடு-ஷோ நடத்த ராகுல்- அகிலேஷ் இருவரும் முடிவு செய்துள்ளனர். இதனால் வாரணாசி தேர்தல் பிரசாரம் பா.ஜ.க.- சமாஜ்வாடி இடையே கடும் பலப்பரீட்சையை ஏற்படுத்தியுள்ளது.