காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் செல்வம் அடைக்கலநாதனை சந்திப்பு
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இச் சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமைகள் தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டும் எனவும் தமது குடும்ப நிலைமைகள் மற்றும் வாழ்வாதார உதவிகளின் தேவைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்திருந்ததுடன் தமது பிள்ளைகளின் கல்வியின் எதிர்காலம் தொடர்பாகவும் அதற்கான உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அத்தோடு, தமது நிலை குறித்து உரிய அதிகாரிகளை சந்தித்து எடுத்தியம்புவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இவற்றை செவிமடுத்த செல்வம் அடைக்கநாதன், தமக்கு குறித்தொதுக்கப்படும் நிதியில் இருந்து வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.
அத்தோடு, காணாமல் போனோர் தொடர்பில் அரசுக்கு அழுத்தம் பிரயோகிப்பதில் இருந்து பின்நிற்கப்போவதில்லை என தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், உரிய அதிகாரிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.