வவுனியா, பாவற்குளம் பகுதியில் ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்காக எதிரிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
பாவற்குளம் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25, 26ஆம் திகதிகளில் ஆறுமுகம் இலங்கராசா என்பவருக்கு மின்சாரம் பாய்ச்சி கிணற்றுக்குள் போட்டுக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்காக 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தில்லையம்பலன் மகேஸ்வரன் அல்லது ரவி மற்றும் சுப்பிரமணியம் மயில்வாகனம் ஆகிய இரு எதிரிக்கு எதிராக வழங்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது .
2016ஆம் ஆண்டிலிருந்து வழக்கின் விளக்கங்கள் நடைபெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கிலே இரண்டாம் எதிரியான சுப்பிரமணியம் மயில்வாகனத்துக்கு எதிராக வழக்குத் தொடுநர் தரப்பினால் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை எனத் தீர்ப்பு வழங்கி இரண்டாம் எதிரியை விடுவித்து விடுதலை செய்ததுடன் முதலாம் எதிரியான தில்லையம்பலன் மகேஸ்வரன் அல்லது ரவி என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு குறித்த ஆறுமுகம் இலங்கராசா என்பவரின் மரணத்தை விளைவித்தார் என்ற விடயம் வழக்குத் தொடுநர் தரப்பால் சந்தேகத்துக்கு அப்பால் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது எனக்கூறி முதலாம் எதிரியை கொலைக்குற்றத்திற்கு குற்றவாளியாகக் கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
திறந்த நீதிமன்றில் தீர்ப்பு வழங்கியபோது மின் குமிழ்கள் மின்விசிறிகள் அனைத்தும் அணைக்கப்பட்டு நீதிபதி உட்பட மன்றில் நின்ற அனைவரும் எழுந்து நின்றபோது தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதியான ஸக்கி ஸ்மாயில் வழங்கை நெறிப்படுத்தியிருந்தார்.