மாணவர்கள் காப்பீட்டுத்திட்டம் தொடர்பாக பெற்றோர்களும் பூரணமாக அறிந்து வைத்திருக்கவேண்டும்.
காப்புறுதி பெறுவதில் கடப்பாடுகள் இருக்கின்றன. எனவே பெற்றோர் அதைப்பற்றிய விளக்கத்துடன் இருந்தாலே உரிய நன்மையை இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம்.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இலவச காப்பீட்டுத்திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வலய கல்விப்பிரதிநிதியும் தமிழ்பாட ஆசிரிய ஆலோசகருமான நிறைமதி தெரிவித்தார். அவர் மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது:
மாணவ சமூகத்தை முன்னேற்று வதன் மூலம் இந்த சமூகத்தை முன்னேற்ற முடியும். இதற்காக ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக்கல்வி இன்று விரிவடைந்து மாணவர்களுக்குரிய உடல் உள நிலையைப் பேணுகின்ற ஒரு திட்டமாக இந்த சுரக்க்ஷா காப்பீட்டுத்திட்டம் ‘என்றும் காப்போம் தேசத்தின் பிள்ளைகளை’ என்ற மகுடவாசகத்துடன் செயற்படுகின்றது.
மாணவர்களுக்கு கற்றலுக்குத் தடையாக இருப்பதும் மாணவர்களுடைய பெற்றோர்களுக்கு ஒரு சுமையாக இருப்பதும் கல்வி சார்ந்த செலவுகள். செலவுகள் காரணமாக மாணவர்களின் கல்வி இடைநடுவே தடைப்படவோ அல்லது கல்வியிலே ஒரு ஊக்கமின்மை ஏற்படவோ வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே தடையை உடைத்தெறியும் நோக்கத்தில் அரசு பல்வேறு திட்டங்களை முன்வைத்து வருகின்றது. அதிலே ஒரு திட்டமாக இந்தக் காப்புறுதித்திட்டம் விளங்கு கின்றது.