புதிய அரசமைப்புத் தொடர்பான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை இறுதிசெய்யும் நோக்கோடு கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடந்த அமர்விலும் அரசின் தன்மை குறித்து தெளிவான ஓர் இணக்கம் எட்டப்படவில்லை.
புதிய அரசமைப்பிலும் அரசின் தன்மை ஒற்றையாட்சி என்பதாகவே இருக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த விடயத்தில் இணக்கம் எதுவும் எட்டப்படவில்லை. முன்னதாக அரசின் தன்மை ஒற்றையாட்சி என்றே குறிப்பிடப்படவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவும் வலியுறுத்தியிருந்தது.
ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தற்போது வழிகாட்டல் குழுவில் விவாதிக்கப்பட்டுவரும் இடைக்கால அறிக்கையில் அரசின் தன்மை ‘ஒருமித்த நாடு’ என்று தமிழிலும், ‘ஏக்கிய ராஜ்ய’ என்று சிங்களத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் அது ‘ஏக்கிய’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற வழிகாட்டல் குழுக் கூட்டத்தில் இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஆங்கிலத்தில் யுனிட்டரி (ஒற்றையாட்சி) என்ற பதத்துக்குப் பதிலாக ‘ஏக்கிய’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்று தெரிவித்தார். ‘யுனிட்டரி’ என்று குறிப்பிடுவதே பொருத்தமானது என்று தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அதனை எதிர்த்தார். ‘ஒற்றையாட்சி’ என்று அதனைக் குறிப்பிடுவது யதார்த்தமற்றது என்று சம்பந்தன் நிராகரித்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல், “வார்த்தைகளில் தொங்கிக்கொண்டிருக்காமல் புதிய அரசமைப்பை முன்கொண்டுசெல்வது பற்றியே சிந்திக்கவேண்டும்” என்றார். இந்த விவாதத்தின் ஒரு கட்டத்தில் இடைக்கால அறிக்கையில் ஏற்கனவே ‘ஏக்கிய ராஜ்ய’ என்று சிங்களத்திலும், ‘ஒருமித்த நாடு’ என்று தமிழிலும் கொடுக்கப்பட்டிருக்கும் தெரிவுகளைப்போன்றே தற்போதைய அரசமைப்பில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே ஒற்றையாட்சி என்பதையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறுவதைப் போன்று கூட்டாட்சி (சமஷ்டி) என்பதையும் குறிப்பிடலாம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது.
ஆனால், அந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் நிராகரித்துவிட்டன. அந்த இரு சொற்களுமே இரு வேறு அர்த்தங்களைக் குறிப்பவை என்பதால் அதனை இடைக்கால அறிக்கையில் சேர்த்துக்கொள்வது இணக்கமொன்று எட்டப்படாதமையைக் குறிக்கும் என்று காரணம் கூறின.
இந்த விவாதத்தையடுத்து, இறுதிசெய்யப்படவுள்ள இடைக்கால அறிக்கையில் அரசின் தன்மை குறித்த உள்ளடக்கத்தை மட்டுமே முன்வைப்பது என்று முடிவுசெய்யப்பட்டது. அரசின் தன்மை ஒற்றையாட்சியா அல்லது கூட்டாட்சியா (சமஷ்டியா) என்பதைக் குறிப்பிடுவதில்லை என்று இணங்கப்பட்டது. எதுவாக இருந்தாலும் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட அதிகூடிய அதிகாரப்பகிர்வை ஏற்படுத்துவது என்பதை அனைத்துத் தரப்புகளும் ஏற்றுக்கொண்டன.