இலங்கையில் அனைவரும் சம பிரஜைகளாக வாழக்கூடிய புதிய அரசமைப்பு எப்போது உருவாகின்றதோ அப்போதுதான் இந்த நாடு சுபீட்சம் அடையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“புதிய அரசமைப்புக்கான முயற்சியில் நாம் அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.
இந்த நாட்டிலே ஒரு இன ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்பதற்காக புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசமைப்பின் காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
இந்த நாட்டில் கூட்டரசு உருவாவதற்கு வடக்கு மாகாண மக்கள் அதிக பங்காற்றியுள்ளனர். இது அரசுக்கும், அனைவருக்கும் தெரியும்.
வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேயே நாம் அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.
ஏனைய மாகாணங்களைவிட வடக்கு மாகாண கூட்டு அரசு உருவாக காரணமாக இருந்தாலும் கூட வடக்கின் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசின் பங்காளிக் கட்சியாக சேரவில்லை.
ஆனால், அரசின் சில முற்போக்கான செயற்திட்டங்களுக்கு உதவி செய்து வருகின்றோம். இது தலைவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் தெரியும்.
இந்த நாட்டில் நிறைவானதொரு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும். அது கிடைக்கும் வரைக்கும், எமது மக்களுக்கு அதிகாரங்கள் சரியான முறையிலே பகிர்ந்தளிக்கப்படும் வரைக்கும் நாங்கள் அரசியல் அதிகாரங்களைக் கையாளமாட்டோம் என்ற கொள்கையுடனேயே எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளோம்” – என்றார்.