மத்திய அரசால் ஒருபோதும் திரும்பப் பெறப்பட முடியாத அளவுக்குப் பகிரப்பட்ட அதிகாரத்தைத்தான் நாம் தீர்வாகக் கேட்கின்றோம் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்.
‘சுடர் ஒளி’யின் சகோதரப் பத்திரிகையான ‘உதயன்’ பத்திரிகைப் பணியாளர்கள் படுகொலை மற்றும் ஊடக நிறுவனம் மீதான தாக்குல் நடத்தப்பட்டதன் 11ஆவது ஆண்டு நினைவாக நேற்று நடத்தப்பட்ட ‘வேட்கை’ எனும் ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ‘புதிய அரசமைப்பு – மக்கள் – மக்கள் பிரதிநிதிகள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-
‘உதயன்’ ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் நான் வந்து அதன் ஒரு திரியை ஏற்றி ஆரம்பித்து வைத்தேன். அப்போது யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளராக இருந்தேன். தற்போதும் ஒரு திரியை ஏற்றி வைத்துள்ளேன். உதயனுக்கும் எனக்கும் நிறையவே இணக்கப்பாடும் உள்ளது. அதுபோல் பிணக்கும் உள்ளது. அப்படி இருந்தும் நான் உதயனுடைய வாசகன் என்ற நிலையில் இருந்து என்றும் மாறியதில்லை.
மண்ணின் உரிமைக் குரல்
‘உதயன்’ இந்த மண்ணின் உரிமைக்குரலாக அன்றும் இன்றும் இருக்கின்றது என்ற காரணத்தால்தான் என்னை மிகவும் பாதித்த கருத்துக்கள் வந்தபோதும் சிரித்துக்கொண்டு இதனை ஏற்றுள்ளேன். ‘உதயன்’ இந்த மண்ணுக்காக மக்களுக்காக எங்களுடைய சுதந்திரத்துக்காக, விடுதலைக்காக ஆற்றிய, ஆற்றுகின்ற பணி் மிக மகத்தானது.
அரசியல் வரலாற்றில் மன்னா் ஆட்சி முடிந்து மக்களாட்சி வந்தபோது அதனுடைய சட்டவாக்கம், நீதித்துறை, நிறைவேற்றுத்துறை என்ற மூன்றோடு நான்காவதாக மக்களாட்சியின் ஒரு தூண் என்றே ஊடகங்கள் வா்ணிக்கப்படுகின்றன. அந்தப் பணிகளைச் செவ்வனவே செய்கின்றபோது ஊடகங்கள் பல்வேறு விமா்சனங்களுக்கு உள்ளாகின்றன. அத்தகைய விமா்சனங்களை தாங்கிக்கொள்ளமுடியாதவா்கள், பொறுத்துக்கொள்ளமுடியாதவா்கள் கடைசியில் ஊடகங்கள் மீது ஆயுதங்களைப் பாவிப்பது உண்டு.
இது தொடர்பில் உதயனுக்கு பல்வேறு அனுபவங்கள் உண்டு. ஊடகங்கள் என்றால் என்னுடைய பாா்வையைில் ஊடு, அகம் என்றே நான் பார்க்கிறேன். உள்ளே ஊடுருவிச் சென்று பார்ப்பது என்று அதன் பொருள். உள்ளே ஊடுருவி பல சா்ச்சைகளையும் அந்தப் படியே சொல்வதனால் ஆபத்து வருகின்றது. ஆனாலும், அவற்றையெல்லாம் தாங்கி நிற்கும் ‘உதயன்’ ஊடகத்துக்குப் பாராட்டுக்கள்.
புதிய அரசமைப்பு முயற்சி
தற்போதைய அரசமைப்பு முயற்சியில் வடக்கு மாகாண சபை ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்தது. எங்களுடைய முன்மொழிவுகளை மாகாணசபை ஏற்றுக்கொண்டு அதனை முன்வைத்தபோதும் அதில் முக்கியமாகப் பங்காற்றியவா்கள் மூன்று போ். முதலமைச்சா், சிவாஜிலிங்கம் மற்றும் நான் ஆகிய மூவருமாகத்தான் அதனைத் தயாரித்தோம். பல நாட்களாக இருந்து ஆராய்ந்து, அதை ஒருங்கிணைத்து ஆவணப்படுத்தியது நான். நீங்கள் ஒருமுறை எங்களுடைய முன்மொழிவுகளை மீட்டுப் பாருங்கள், அதில் தெளிவான கருத்துக்களை முன்வைத்துள்ளோம்.
ஆட்சிமுறை ஒற்றையாட்சியா, கூட்டாட்சி (சமஷ்டி) முறையா, வடக்கு, கிழக்கு மீளிணைப்பா என்றெல்லாம் விரிவாகப் பேசியுள்ளோம். நாங்கள் அதிகாரங்களைப் பரவலாக்குவது பற்றியோ, அதிகாரங்களைப் பிரித்துக்கொடுப்பது பற்றியோ பேசவில்லை. பகிரப்பட்ட அதிகாரம் என்பதைப் பற்றித்தான் பேசியிருக்கின்றோம். அதாவது கொழும்பால் மீண்டும் எடுக்க முடியாத வகையில் அதிகாரங்களைப் பகிர்வது குறித்துத்தான் பேசியிருக்கிறோம். மாற்றமுடியாத ஏற்பாடுகள் இருக்கவேண்டும்.
பிராந்தியங்கள்
வடக்கு, கிழக்கு மீளிணைப்பு என்பது ஒரு பிரச்சினையாகத்தான் இருக்கின்றது. எங்களுக்கும் பிரச்சினை அவா்களுக்கும் பிரச்சினை. அவா்களுக்கு இணைப்புக் குறித்து அச்சம் பயம் உள்ளது. புதிய அரசமைப்புக்கான கருத்தறியும் குழுவின் அறிக்கையில் 5 அலகுகளாக பிரிக்கக்கூடிய ஒரு ஏற்பாடும் விவாதிக்கப்பட்டுள்ளது.
சில சமயம் ஒரு அலகாக வடக்கு, கிழக்கும் ஏனைய 7 மாகாணங்களும் 4 மாகாணங்களாக அலகுகளாகவும் வரலாம். இணைப்பு அந்த வகயில் சாத்தியப்பக்கூடியதே. இந்த அமைப்பில் வடக்கு, கிழக்கு மீளிணையும்போது முஸ்லிம்களுக்கு ஓர் அலகும் மலையக மக்களுக்கு ஓர் அலகும் இருக்கவேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறோம். இது சந்திரிகா அம்மையாரால் முன்வைக்கப்பட்ட பிராந்திய முறைமைக்கு கிட்ட வரக்கூடியதாக இருக்கக்கூடும்.
புதிய அரசமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட அரசமைப்பு நிர்ணய சபையின் உப குழுக்களின் அறிக்கைகளைப் பார்க்கும்போது சில முன்னேற்றகரமான கருத்துக்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக மத்திக்கும் புற அலகுகளுக்கும் இடையிலான அதிகாரப்பகிா்வு சம்பந்தமான குழுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினா் சித்தாா்த்தன் தலைமை தாங்கினாா். அந்தக் குழுவின் அறிக்கையில் பல முன்னேற்றமான விடயங்கள் இருக்கின்றன.
இன்றைக்கு இருக்கின்ற மாகாண சபைகளுக்கு சட்டமியற்றும் அதிகாரம், ஒதுக்குதல் என்பன உள்ளன. ஆனால், அது அல்ல நாங்கள் கேட்பது. எங்களைப் பொறுத்தவயைில் மத்தியில் இருக்கக்கூடியவற்றை அதிகாரங்களைத் திட்டவட்டமாக வரையறுத்துக்கொள்ளலாம். பாதுகாப்பு, தேசிய நிதி போன்ற சில விடயங்களை அவர்கள் வைத்துக் கொள்ளலாம். அது தவிர வேறு எந்தவிதமான பட்டியலும் இருக்காது. நாங்கள் மாகாணம் என்றுகூடப் பேசவில்லை. மாநிலம் என்றுதான் பேசியுள்ளோம். மத்திய அரசு என்பதையும் அரசுகளின் ஒன்றியம் என்றுதான் சொல்கின்றோம்.
முழு அதிகாரம் வேண்டும்
இப்போது இருக்கும் மாகாண சபை ஒரு வெள்ளை யானைதான். நாங்கள் வரவு – செலவுத் திட்டத்தை 7 ,8 நாளாக விவாதிப்போம். ஆனால், ஒரு ரூபாவை அங்கிருந்து இங்கு மாற்ற எமக்கு அதிகாரம் இல்லை. தேசிய நிதி ஆணைக்குழு கொடுக்கின்ற நிதி மொத்த ஒதுக்கீ்டாக வழங்கப்படவேண்டும். மாகாண அரசு அந்த நிதியை எதுக்கு ஒதுக்கின்றது என்று தீா்மானிக்கும். அத்தகைய அதிகாரம்தான் எமக்கு வேண்டும். இப்போது அப்படி இல்லை. எல்லாவற்றையும் தீா்மானித்துதான் இங்கே அனுப்புகிறார்கள்.
நேற்றுக்கூட ஒற்றையாட்சிதான் என்று ரணில் மீண்டும் கூறியிருக்கிறார். அவர் அப்படிச் சொல்கிறார் என்பதற்காக நாம் கூட்டாட்சியைக் கேட்காமல் இருக்கவேண்டும் என்பதில்லை. 1949 டிசம்பா் 18 ஆம் திகதியில் இருந்து நாங்கள் கூட்டாட்சியைத்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.
சாத்தியப்பாடுடைய கலைதான் அரசியல். சாத்தியம் இல்லாதததை பேசுவது அரசியல் அல்ல. இங்கு அரைவாசிப்போ் சாத்தியம் இல்லாமல்தான் பேசுகின்றாா்கள். அதனை எமது மக்கள் நம்புகிறாா்கள். சம்பந்தன் இன்று சொல்வது சாத்தியமாகுமா, இல்லையா என்பதைப் பாா்க்கவேண்டும். சம்பந்தன் சாத்தியமில்லாத சில விடயங்களைச் சொல்லாமல் விடுகிறார். இதுதான் உண்மை. கூட்டாட்சி என்பது சாத்தியம். உலக நாடுகளில் இருக்கக்கூடிய ஆட்சிமுறை. வடக்கு, கிழக்கு மீளிணைப்பு சாத்தியம். 1987ஆம் ஆண்டு சாத்தியமானது. வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டது. 18 வருடங்கள் இணைக்கப்பட்டு இருந்தது. அந்தச் சாத்தியப்பாடுகளைத்தான் நாம் கேட்கிறோம்.
அரசியல் பகிா்வு, அதிகாரப்பகிா்வு, நிதிப்பகிா்வு கொண்ட கட்டமைப்பை நோக்கி நாங்கள் நகர வேண்டும். நியாயம் கிடைக்க வில்லை என்பது உண்மை. நல்லாட்சியிலம் நீதி கிடைக்கவில்லை என்பது உண்மை. அதற்காக நாம் வெளியேறிவிட முடியாது. சாத்தியமானவற்றைச் சாதிக்க வேண்டும். அதுதான் அரசியல் – என்றார்.