பூநகரி, செல்விபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார். விபத்துக்குக் காரணமானது எனக் குற்றஞ்சாட்டப்படும் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டார்.
சாரதியைக் காப்பாற்றுவதற்காக விபத்துக்குக் காரணம் உயிரிழந்தவர் பயணித்த உந்துருளி (மோட்டார் சைக்கிள்) மாட்டுடன் மோதுண்டதே என்று பொலிஸார் ஏமாற்ற முற்படுகின்ற னர் எனச் சந்தேகம்கொண்ட உறவினர்கள் சடலத்தைப் பொறுப்பேற்கமாட்டோம் என்று கூறிப் போராட்டம் நடத்த முற்பட்டதால் கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் நேற்றுப் பகல் குழப்ப நிலை ஏற்பட்டது.
எனினும் நேற்று மதியம் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நடத்திய விசாரணையில் வாகனம் மோதியே இறப்பு சம்பவித்தது என்று ஒருவர் சாட்சியம் தெரிவித்ததை அடுத்து சாரதியைக் கைது செய்யப் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இதனால் நிலமை கட்டுக்குள் வந்தது.
பூநகரியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிங்கராசா கேதீஸ்வரன் (வயது – 32) என்பவரே விபத்தில் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பரந்தன் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது பரந்தன் நோக்கிச் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான பாரஊர்தியுடன் (லொறி) மோதி விபத்துக்குள்ளானார் என்று கூறப்படுகின்றது.