கலஹா புபுரஸ்ஸ டெல்டா தோட்ட பச்சைக்காட்டுப் பிரிவில் கற்குகை ஒன்றினுள்ளிருந்து பழமைவாய்ந்த நாகலிங்கச்சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அருள் வாக்குக்கூறும் நபரொருவரின் தகவலின் அடிப்படையிலேயே குறித்த சிலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சிலையானது தோட்டத்தில் அமைந்துள்ள ஆறு ஒன்றுக்கு அருகில் இருந்த கற்குகை ஒன்றுக்குள்ளிருந்தே மீட்கப்பட்டுள்ளது. குறித்த தோட்டத்தில் மார்கழி பஜனையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் கரகம் பாலிக்கும் நிக ழ்வு இடம் பெற்றுள்ளது.
இதன் போது பஜனை குழுவில் பிரதான பங்கு வகிக்கும் வசின்டன் என்ற அருள்வாக்கு கூறும் நபர் பூஜையின் உச்சத்தின் போது மேற்குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி அங்கு சிவனுடைய சிலை ஒன்று இருப்பதாகவும் அதனை மீட்டு பூஜைகளை மேற்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
இதையடுத்து தீப் பந்தங்களை கொளுத்திக்கொண்டு அவ்விடத்திக்குச் சென்ற இளைஞர்கள் குறித்த நபர் கூறிய இடத்திலிருந்த கற்குகைக்குள் சென்று பார்த்த போது குறித்த சிலை மண் நிறத்தில் காணப்பட்டுள்ளது.
இதன் போது சிலை மீட்கப்பட்டு அதற்கு அபிஷேகம் செய்யப்பட்டு இராமர் கோயிலின் ஒரு புறத்தில் வைத்துள்ளனர்.
சிலை மீட்பு தொடர்பாக கேள்வியுற்ற கலஹா பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவித்துள்ளனர். குறித்த சிலையினை பார்வையிடுவதற்காக கண்டி ,கம்பளை புஸல்லாவை நுவரெலியா போன்ற பிரதேசங்களிலிருந்தும் மக் கள் வருகை தந்த வண்ணமுள்ளமையும் குறிப்பிடதக்கது.