வடக்கு, கிழக்கு மாகாண இணைப்புத் தொடர்பில் உரையாற்ற முஸ்லிம் சகோதரர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் மன்னார் மாவட்ட மக்களோடு நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய அரசியல் யாப்புக்கான நடவடிக்கை குழுவின் அறிக்கை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது இறுதியானது அல்ல. அதேநேரம் இந்த அறிக்கை தொடர்பில் நேர் எதிர் மாறான கருத்தை கூட்டு எதிர்க்கட்சி எனச் சொல்லப்படுபவர்கள் ஆரம்பித்துவிட்டனர். அதாவது பிரிவினைக்கும் தனிநாட்டிற்கும் வழி வகுக்கின்றதாம் என்கின்றனர்.
இதேநேரம் அதிலே சமஷ்டி இல்லை எனவும் சொல்லப்படுகின்றது. ஆனால், தற்போதுள்ள அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி நாடு எனத் தெளிவாகவுள்ளது. ஆனால், புதிய வரைபில் அது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது மாகாண சபையிலே அதிகாரம் பொருந்திய ஆளுநரின் அதிகாரம் உள்ளது. அதுவும் புதிய வரைபில் முழுமையாக நீக்கப்பட்டு ஆளுநர், முதலமைச்சர், சபை அங்கீகாரம் இன்றி ஆளுநர் எதையும் நிறைவேற்ற முடியாது எனத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு, குடிவரவு – குடியகல்வு போன்றவையே மத்தியிடம் இருக்கும் அதேநேரம் மாகாணத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெற முடியாதவாறும் சட்ட ஏற்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இறைமையின் கீழ் உள்ளூராட்சி, மாகாண சபை, நாளுமன்றங்களும் அமைவதோடு செனட் சபை அமைப்பாக இரண்டாம் சபையில் 55 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர்.
இந்த 55 உறுப்பினர்களும் ஒவ்வொரு மாகாண சபையிலும் இருந்து 5 பேர் விகிதமாக 45 பேரும் நாடாளுமன்றம் ஊடாக 10 பேரும் என்ற அடிப்படையிலேயே இந்த 55 பேரும் அங்கம் வகிப்பர். இவ்வாறெல்லாம் உருவாக்கப்பட்ட அறிக்கையில் தற்போது உள்ளது மட்டும் இறுதியானதல்ல. இவை தொடர்பில் விவாதம் இடம்பெற்று இறுதி செய்யப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் நாடாளுமன்றிற்கு கொண்டு வரப்படும். அங்கும் மூன்றிலிரண்டு இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதன் பிற்பாடு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறான கருமங்களின் மத்தியில் கூட்டு எதிர்க்கட்சி எனச் சொல்லப்படுவோரின் எதிர்ப்பு மட்டுமல்ல எம்மவர்களிலும் அவ்வகையினர் உண்டு. அவர்கள் இந்த ஆண்டின் மார்ச் மாதம் நடவடிக்கை குழுவில் இருந்து சம்பந்தன் விலக வேண்டும் எனக் கோரினர். அவ்வாறான கருத்திற்கு நான் பதிலளிப்பது கிடையாது. இதேநேரம் தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பில் புதிய வரைபில் 3 பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் சாதகமான ஓர் தேர்வை மேற்கொள்ள முஸ்லிம் சகோதர்களுடன் பேச நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். இதேநேரம் அரசியல் யாப்புத் தொடர்பில் எந்த அதிகாரப் பகிர்வுமே தேவையில்லை என எழுதி வழங்குபவர்களும் உண்டு .
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது ஒற்றுமைக்காக முஸ்லிம் முதலமைச்சரை ஏற்கத் தயார் என நானே முதலில் அறிவித்திருந்தேன். ஆனால், தேர்தல் முடிந்த கையோடு எம்மை ஓரம் கட்டியே ஆட்சி அமைக்கப்பட்டது. இருப்பினும் அவர்களின் ஆட்சி நீடிக்காமல்போக நாமே கைகொடுத்தோம்” – என்றார்.