Monday , December 23 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புதிய அரசமைப்பு: இடைக்கால அறிக்கை விரைவில் என்கிறார் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!

புதிய அரசமைப்பு: இடைக்கால அறிக்கை விரைவில் என்கிறார் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!

புதிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன எனவும், வெகுவிரைவில் அரசமைப்பு உருவாக்கம் தொடர்பான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், முதல் இரண்டு அரசமைப்புகளிலும் தமிழ்த் தரப்பின் பங்கேற்பு இருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாடு 30 வருட மிலேச்சத்தனமான யுத்தத்தை எதிர்கொண்டது. அதனை வெற்றிகொண்டு முன்னோக்கி நாம் பயணிக்கவேண்டும்.

1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் உலகுக்கு முன்னுதாரணமான நாடாக இலங்கை விலங்கியது. அனைத்து அபிவிருத்திகளும் எமது நிதியைக்கொண்டே மேற்கொள்ளப்பட்டன. எனினும், அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றில் அதிகாரத்துக்காகப் போட்டியிட ஆரம்பித்தன. பாதை பிழைத்தது. எனினும், தற்போது எமக்கு புதிய இலங்கையொன்றை உருவாக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஆகவேதான் பிரதமரும், ஜனாதிபதியும் இணைந்து புதிய அரசமைப்பொன்றை உருவாக்கப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

புதிய அரசமைப்பு அனைத்து இன மக்களும் இணைந்து வாழக்கூடிய வகையில் உருவாக்கப்படும்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க பிரதமராக இருந்த சந்தர்ப்பத்தில் அரசமைப்பு உருவாக்கத்துக்கான வரைபு உருவாக்கப்பட்டது. அவரே அந்த அரசமைப்பின் ஆசிரியர். இதில் தமிழ்க் கட்சிகள் பங்கேற்கவில்லை. ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசமைப்பு உருவாக்கத்திலும் தமிழ்க் கட்சிகள் பங்கேற்கவில்லை.

எனினும், முதல் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளினதும் பங்கேற்புடன் அரசமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளது. சில விடயங்களில் இணக்கம் காணப்பட்டுள்ளன.

அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். தேவையேற்படின் வாக்கெடுப்புக்குச் சென்று புதிய அரசமைப்பை உருவாக்குவோம். இதுவே அரசின் எதிர்கால இலட்சியம்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …