அரசின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் தகவலறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியதாக மார்தட்டிக்கொள்ளும் அரசு, சமூக வலைத்தளங்களை முடக்கி பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சாடியுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் எந்த அரசும் செய்யாத வகையில் தற்போதைய அரசு சமூக வலைத்தளங்களை முடக்கி வைத்துள்ளது.
குறிப்பாக, தமக்கு சாதகமான நிலைப்பாட்டில் சமூக வலைத்தளங்கள் செயற்பட்டபோது அவற்றை புகழ்ந்த ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும், அவர்களுக்கு எதிரான நிலைப்பாடு ஏற்பட்டபோது ஏன் தடைசெய்தனர என்றும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின்போது, நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களும் காட்சிகளும் பகிரப்பட்டதாக தெரிவித்து, சமூக வலைத்தளங்களை அரசு முடக்கிவைத்துள்ளது. பிரதேசத்தின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், விரைவில் அவற்றின் மீதான தடை நீக்கப்படுமென அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.