மும்பை மாநகராட்சி தேர்தல் – சச்சின் டெண்டுல்கர் பாந்த்ரா பகுதியில் வாக்களிப்பு
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
மராட்டியத்தில் மும்பை, தானே, நாக்பூர், புனே, நாசிக் உள்பட 10 மாநகராட்சிகள், 11 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 118 பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
மொத்தம் உள்ள 5,512 பதவிகளுக்கு 17,331 பேர் போட்டியிடுகிறார்கள். 3.77 கோடி வாக்காளர்கள் ஓட்டுப் போடுகிறார்கள். மொத்தம் 40,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 2.76 லட்சம் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மும்பை மாநகராட்சியில் மொத்தம் 227 வார்டுகள் உள்ளன. இதற்கு 2,275 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வாக்குப்பதிவுக்காக 7,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இன்று காலை முதலே இங்கு விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராஜ்யசபா எம்.பி-யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் வந்து மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். பின்னர் தனது மனைவியுடன் வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்த சச்சின், மக்கள் அனைவரும் தங்கள் வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.