கடற்படையை வெளியேறக் கோரி முள்ளிக்குளம் மக்கள் போராட்டம்!
கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி, மன்னார் – முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் நேற்றுக் காலை 7.30 மணியளவில் முள்ளிக்குளம் கிராம நுழைவாயிலில் நடைபெற்றது.
மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீன்பிடி மற்றும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி கடற்படையினரால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இதனால், இடம்பெயர்ந்த 350 குடும்பங்கள் இடம்பெயர்ந்து மன்னார் மாவட்டத்தின் முருங்கன், வாழ்க்கைபெற்றான்கண்டல், தாழ்வுபாடு, பேசாலை, வங்காலை உள்ளிட்ட பல இடங்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் குடியமர்ந்தனர்.
அத்துடன், பல குடும்பங்கள் மோதலின்போது பாதுகாப்புப் காரணங்களுக்காக தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்தனர்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி முள்ளிக்குளம் கிராமத்துக்கு அருகிலுள்ள மலங்காடு என்னும் காட்டுப் பிரதேசத்தை துப்பரவுசெய்து 176 குடும்பங்கள் குடியமர்ந்தனர்.
அதேவேளை, மலங்காடு பிரதேசத்தில் இருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் காயாக்குழி என்னும் இடத்தில் 92 குடும்பங்கள் குடியமர்ந்துள்ளனர்.
எனினும், மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்துக்குச் சொந்தமான 53 ஏக்கர் காணி கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
குறித்த காணியை விடுவிக்குமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அரசுடன் பல்வேறு பேச்சுகளில் ஈடுபட்டும் இன்றுவரை காணிகளை விடுவிக்கப்படவில்லை.
இந்தநிலையில், தமது வாழ்வாதாரங்களுடன், தமது கிராமத்தை முழுமையாக அபகரித்துள்ள கடற்படையினர் தமது கிராமத்தை விட்டு வெளியேறுமாறு முள்ளிக்குளம் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



