Monday , June 17 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தாயக மண்ணில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது திலீபனின் நினைவேந்தல் வாரம்!

தாயக மண்ணில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது திலீபனின் நினைவேந்தல் வாரம்!

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அமைதிப் படையாகக் காலடி எடுத்துவைத்து ஆக்கிரமிப்புப் படையாக மாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வு தாயக மண்ணில் நேற்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வார நிகழ்வு நல்லூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியிலும், அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நல்லூர் முன் வீதியிலும் நேற்றுக் காலை ஆரம்பமானது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியால் நேற்று 10.10 மணிக்கு தியாக தீபம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இடத்தில அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில் நினைவேந்தல் வார நிகழ்வு உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.

முதல் நிகழ்வாக கடந்த 23 வருடங்களாக அரசியல் கைதியாக சிறையில் வாடும் பார்த்தீபனின் தாயார் தியாக தீபத்துக்கு ஈகச் சுடரேற்றினார்.

தியாக தீபத்தின் திருவுருவப்படத்துக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர். தொடர்ந்து பொதுமக்கள், கட்சிகளின் அங்கத்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

 

நினைவுரைகளை ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!” என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வார நிகழ்வுகள் தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகின.

ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைத் தீயை விதைத்த தியாக தீபத்தின் நினைவேந்தல் வார நிகழ்வுகள் புலம்பெயர் தேசங்களிலும் நேற்று பேரெழுச்சியுடன் ஆரம்பமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …