Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அவசரகால சட்டம் தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு

அவசரகால சட்டம் தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் ஒருமாத காலப்பகுதிக்கு பின்னர் தளர்த்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன குறித்த உறுதிப்பாட்டினை வழங்கியுள்ளார்.

பாதுகாப்பு துறையின் வெற்றிகரமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இத்தகைய கொடூர தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கு பாதுகாப்புத் துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்காக புதிய சட்டங்கள் வகுக்கப்படுவதோடு , நிறுவனக் கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகள் அதிகம் காணப்படுகின்றமையினால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு பல நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தாக்குதலுக்கு பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை தளர்த்துமாறு ஜனாதிபதி தூதர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதற்கு பாதுகாப்புத் துறையினரும் புலனாய்வுத் துறையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணமாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநாட்டு புலனாய்வுத் துறையினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற உதவிகளையும் பாராட்டியுள்ளார்.

இதேவேளை கடந்த வாரம் இடம்பெற்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பின்போது பயண எச்சரிக்கையை தளர்த்துமாறு பிரதமர் ரணில் கோரியிருந்தார்.

இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு சீனா விடுத்திருந்த பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக, சீன தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv