பெங்களூருவில் வெற்றியை தொடர விரும்புகிறோம்: மிட்செல் மார்ஷ் கருத்து
பெங்களூரு டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு எதிராக இந்திய அணி கடுமையாக போராடும். எனினும் இந்த மைதானத்தில் எங்களது வெற்றியை நாங்கள் தொடர விரும்புகிறோம் என ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை புனே டெஸ்ட்டில் 105 மற்றும் 107 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்த ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லெக் ஸ்பின்னரான ஸ்டீப் ஓஃகீப் 12 விக்கெட்கள் வீழ்த்தி அசத்த, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
2-வது டெஸ்ட் போட்டி பெங்க ளூரு சின்னசாமி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் மிட்செல் மார்ஷ் கூறும்போது, “இந்திய அணி எங்களுக்கு எதிராக கடுமையாக போராடும். தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் நாங்கள், இந்திய அணியிடம் இருந்து சிறந்த போராட்டத்தை எதிர்பார்க்கிறோம்.
பெங்களூரு மைதானத்தில் இதற்கு முன்னர் நாங்கள் வென்ற வழியை தொடர விரும்புகிறோம். நிச்சயம் இது நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் விளையாடி உள்ள 20 டெஸ்ட் போட்டிகளில் புனேவில் கிடைத்த வெற்றி தான் மிகச் சிறந்தது” என்றார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. இரு ஆட்டங்களை டிராவில் முடித்துள்ளது.