காணாமல் போனோர் விடயத்தை மறப்போம் – கோத்தபாய
காணாமல் போனோர் விடயத்தை மறந்து அனைவரும் முன்நோக்கி பயணிப்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று பகல் ஊடகங்களின் ஆசிரியர்களை சந்தித்தபோது அவர் இதனைக் கூறினார்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் உயிருடன் இல்லை என்றும் அவை இதன்போது மீண்டும் தெரிவித்தார்.
கடத்தப்பட்டமை மற்றும் காணாமலாக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகளின் சிறுவர்களுக்கான அமைப்பு போரின் பின் நடத்திய ஆய்வில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே முறைப்பாடுகள் பதிவாகியதாவும் 2600 முறைப்பாடுகளில் 08 முறைப்பாடுகயே படையினருக்கு எதிராக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்ட 19ஆவது திருத்தத்தினால் நாட்டின் ஆட்சிமுறை சீர்குலைந்ததாகவும், அதனால் அந்த திருத்தம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
குறிப்பாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களால் ஊடகங்களுக்கு சுயாதீனமற்ற கருத்து வெளியிடப்படுவதாகவும் அவர் நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் பொலிஸ்மா அதிபர் மீது நம்பிக்கை இல்லாததினால்தான் பொலிஸ் ஆணைக்குழு அமைக்கப்பட்டதாகவும் ஆனால் அரசியல் தலையீடுகள் இல்லை என கூறி இறுதியில் அரசியல் தலையீடுகளே ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே சுயாதீனமாக அவர்கள் செயற்பட இந்த 19ஆவது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இராணுவ மயமாக்கல் குறித்து கருத்து வெளியிட்ட அவர், சிவில் நிர்வாக சேவையில் தன்னை விடவும் நல்லாட்சி அரசாங்கமே அதிகளவான இராணுவ அதிகாரிகளை சிவில் நிர்வாகத்தில் நியமித்ததாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.