காணாமல்போனோரின் விடயத்தைக் காணாமல் ஆக்க முயல்கின்றது அரசு! – உறவினர்கள் கடும் விசனம்
“காலத்தை இழுத்தடித்து – எங்களை அலைக்கழித்து, காணாமல்போனோர் பிரச்சினை காணாமல்போகச் செய்வதற்குக் நல்லாட்சி அரசு முயற்சிக்கின்றதா ? இவ்வளவு நாட்களாகப் போராடி வருகின்ற எங்களை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது இந்த அரசு.”
– இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள காணாமல்போனோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 24 ஆவது நாளாக இன்று புதன்கிழமையும் தொடர்கின்றது. இதேவேளை, தென்னிலங்கையில் செயற்படும் அமைப்புக்களான, சுதந்திரத்துக்கான மகளிர் அமைப்பு, சமர உரிமை இயக்கம், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு என்பன நேற்றைய தினம் நேரில் ஆதரவு வழங்கின. கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் போராட்டத்தில் ஈடுபடும் உறவுகளுடன் அவர்களும் அமர்ந்திருந்து ஆதரவு வழங்கினர்.
வவுனியா நகரில் இன்று புதன்கிழமை 20ஆவது நாளாகவும் காணாமல்போனோரின் உறவினர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதேவேளை, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், சீடோ பெண்கள் ஒன்றியம் என்பவை நேற்று இணைந்து பேரணியாக வவுனியா கலாசார மண்டபத்திலிருந்து போராட்டம் இடம்பெறும் இடத்திற்குச் சென்று தமது ஆதரவை வழங்கினர்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் இன்று புதன்கிழமை 8ஆவது நாளாகவும் போராட்டத்தைக் காணாமல்போனோரின் உறவினர்கள் முன்னெடுத்தனர்.