இலங்கையின் அமைதிக்கு எதிராக இனக் கலவரங்களைத் தூண்டிவிடும் பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இந்த அரசின் பிரபல அமைச்சர்களில் ஒருவரான பாட்டலி சம்பிக்க ரணவக்கவே பாதுகாப்பு வழங்கி வருகிறார் என லங்கா சமசமாஜ கட்சியின் பிரதம செயலாளரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஞானசார தேரருக்கு அமைச்சரொருவர் பாதுகாப்பு வழங்கி வருகின்றார் என ஊடகங்கள் மறைமுகமாக செய்திகளை வெளியிட்டு வந்திருப்பதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே அந்த அமைச்சர் என்பது இப்போது அம்பலமாகியிருப்பதாகவும் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்திருக்கும் ஏனைய விவரங்கள் வருமாறு:-
“ஹெல உறுமய கட்சிக்கும் பொதுபலசேனாவுக்கும் நீண்டகாலமாகவே நெருங்கிய உறவு இருக்கிறது. 2004ஆம் ஆண்டு ஞானசார தேரர் ஹெல உறுமய கட்சியின் சார்பில் தேர்தலில் களமிறக்கப்பட்டார். ஹெல உறுமய கட்சியின் தற்போதைய தலைவரான விமலசார தேரரும் முன்னர் பொதுபலசேனாவின் உறுப்பினராக இருந்தவரே.
எனவே, பொதுபலசேனாவின் செயலாளரான ஞானசார தேரருக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க அபயமளித்து வருவதில் எவ்வித சந்தேகமும் இல்லை” – என்று திஸ்ஸ விதாரண திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.