ஊடகத்துறை அமைச்சு மற்றும் கலை,கலாசார அமைச்சின்கீழ்வரும் சில திணைக்களங்களைத் தனது அமைச்சுக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் தான் கோரிக்கை விடுத்தார் என வெளியாகியுள்ள தகவல்களை காணி, நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக நிராகரித்தார்.
“பதவிக்காக அழையும் நபர் நான் அல்லன். இதுவரை எந்தப் பதவியையும் கேட்டுவாங்கியதில்லை” என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“காணி அமைச்சராக நியமனம் பெற்றுள்ள நான், திரைப்படக்கூட்டுதாபனம், அரச அச்சம் உள்ளிட்ட மூன்று விடயதானங்களை எனது அமைச்சின்கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நான் அப்படி எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை. இரண்டரை வருடங்கள் ஊடகத்துறை அமைச்சுப் பதவியை வகித்தேன். அக்காலப்பகுதியில் எந்தவொரு ஊடகவியலாளரும் கொல்லப்படவில்லை; தாக்குதல்களும் நடத்தப்படவில்லை. ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் வகையில் தகவல் அறியும் சட்டத்தைக் கொண்டுவந்தேன்.
எனவே, எந்தவொரு செய்தியையும் வெளியிட முன்னர் அதை உறுதிப்படுத்தி வெளியிட்டால் பயனுடையதாக இருக்கும். காணி அமைச்சை விரும்பியே ஏற்றேன். இதன்மூலம் நாடெங்கும் சென்று மக்களுக்குச் சேவையாற்றக்கூடியதாக இருக்கும். பதவிக்காக அழைப்பவன் நான் அல்லன். இதுவரை எந்தவொரு அமைச்சையும் கேட்டுவாங்கியதில்லை” – என்றார்.
அதேவேளை, “அமைச்சர் கயந்த கருணாதிலக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இப்படி எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை என்பதை என்னால் பொறுப்புடன் கூறமுடியும்” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீரவும் குறிப்பிட்டார்.