காஷ்மீரில் கூட்டு காவல்துறை மற்றும் ராணுவப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய ரகசிய தாக்குதல் – 4 பேர் பலி
ஸ்ரீநகருக்குத் தெற்கே 60 கி.மீ. தொலைவில் உள்ள முலுசித்ரகாம் பகுதியில், கூட்டு காவல்துறை மற்றும் ராணுவப் படையினர் மீது, தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலியாகினர்.
இந்தத் தாக்குதல் வியாழக்கிழமை காலை நடந்துள்ளது. இதில் பலியான நால்வரில் 3 பேர் ராணுவ வீரர்கள். பெண் ஒருவரும் பலியானார்.
பதுங்கியிருந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து ஸ்ரீநகரைச் சேர்ந்த காவல்துறை செய்தித்தொடர்பாளர் ‘தி இந்து’விடம் கூறும்போது, ”காஷ்மீரில் கூட்டு காவல்துறை மற்றும் ராணுவப் படையினர் மீது தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதல் வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு வீரர் படையினர், தங்கள் பணியை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்த போது நடத்தப்பட்டது.
தாக்குதலில் இரண்டு உயரதிகாரிகள் உட்பட 6 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதில் பலத்த காயங்களால் 3 வீரர்கள் பலியாகினர்.
தாக்குதலின் போது அருகாமை வீட்டின் உள்ளே இருந்த தஜா என்னும் பெண்ணின் மீது தவறுதலாக புல்லட் பாய்ந்தது. இதில் அவரும் உயிரிழந்தார்.
44 ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவைச் சேர்ந்த ராணுவப் படையினர், குங்னூ ஷோபியன் பகுதியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.




