மைத்திரி எடுத்த தீர்மானம் – மகிழ்ச்சியில் தமிழ் மக்கள்!
அம்பாறை பொத்துவில் 60ம் கட்டை கனகர் கிராம தமிழ்மக்கள் காணிகளை மீட்க போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர்களின் போராட்டம் நேற்று 450வது நாளை எட்டியது.
இந்த நிலையில், வடக்கு கிழக்கில் கையகப்பட்டுத்தப்பட்ட நிலங்களை விடுவிப்பதென்ற ஜனாதிபதியின் திட்டத்தின் ஒரு அங்கமாக குறித்த மக்களின் காணிகளும் பொதுமக்களிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 பிரதான சாலையில் 60ம் கட்டை ஊறணி பகுதியில் கனகர் கிராமம் அமைந்துள்ளது.
அங்கு வாழ்ந்த 125 குடும்பங்களது 225 ஏக்கர் காணிகள் முதற் தடவையாக நிலஅளவை செய்யப்படுவதற்காக நேற்ரையதினம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பேரில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜா முன்னிலையில் குறித்த காணிகள் நிலஅளவை செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில் குறித்த காணிகள் நீண்டகாலமாக பாவனையற்ற பிரதேசமாக இருந்ததனால் காடு மண்டியுள்ள நிலையில் நேற்றையதினம் கனரக வாகனங்களின் மூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
நில அளவையின் முதற்கட்டமாக 22 ஏக்கர் காணியை நேற்றுமுன்தினம் வனபரிபாலன திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளதோடு கட்டம் கட்டமாக 225 ஏக்கரும் துப்பரவு செய்யப்பட்டு காணி பகிர்ந்தளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் நிலங்களை விடுவிக்கும் வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக பொத்துவில் கனகர்கிராம மக்களின் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.
இதேவேளை இற்றைக்கு 58 வருடங்களுக்கு முன்பு அங்கு வாழ்ந்துவந்த தமது காணிகளைக்கோரி அந்த மக்கள் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர். 1960களில் சுமார் 278 குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில் 1981களில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் காலத்தில் முன்னாள் எம்.பி. அமரர் எம்.சி.கனகரெத்தினத்தின் முயற்சியால் அங்கு குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின்னர் வீடுகட்ட அரை ஏக்கர் நிலமும் பயிர்செய்ய 2ஏக்கர் நிலமும் தரப்பட்டு பேர் குடியமர்த்தப்பட்டு சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர்.
1990களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற அவர்களை, மீள்குடியேற வனபரிபாலன திணைக்களம் அனுமதிக்காததோடு அது தமது கட்டுப்பாட்டு பகுதியென அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் கடந்த 28 வருடங்களாக அந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களிலேயே அகதி வாழ்க்கை வாழ்ந்தனர்.
இதையடுத்து கடந்த 2018.08.14ம் திகதி தமது நிலத்தை கோரி தொடர் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், தற்பொழுது அவர்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படவுள்ளதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.