முல்லைத்தீவு மாங்குளம், மதகு வைத்த குளத்திலிருந்து ஆண் ஒருவர் சடலமாக நேற்று நண்பகல் மீட்கப்பட்டார்.
அதே இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான காளியண்ணன் சூரியகுமார் (வயது – 39)என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். சூரியகுமாரை நீண்ட நேரமாக் காணவில்லை என அவரது உறவினர்கள் தேடினர்.
வீட்டின் அருகில் உள்ள மதகு வைத்த குளக் கரையோரமாக அவரின் துவிச்சக்கர வண்டியும், அவர் அணிந்திருந்த பாதணிகளும் காணப்பட்டன. இதை அடுத்து குளத்தினுள் இறங்கித் தேடிப் பார்த்தனர்.நீரினுள் தாண்டிருந்த சூரியகுமார் நீரின் மேல் கொண்டுவரப்பட்டார்.
பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். சூரியகுமார் உயிருடன் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் அவரை மாங்குளம் வைத்தியசாலைக்குத் தூக்கிச் சென்றனர். எனினும் அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.