இனவாத உணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்ரம கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
“ஆரம்பத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கியத்தை வலுவூட்டி மதம் சாராத ஒரு கட்சியாக செயற்பட்டு வருகின்றது. உண்மையான இலங்கையின் அடையாளத்தைக் கட்டியெழுப்ப கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டங்களை சீர்குலைப்பதற்கு அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து கட்சி கவனம் செலுத்தியுள்ளது.
இன நல்லிணக்கம், மத ஒருமைப்பாடு, போன்ற விடயங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒருபோதும் இரண்டு விதமான கருத்துக்கள் இருந்ததில்லை.
இனவாதத்தினை வளர்த்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்துகின்றோம்” என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பிட்டுள்ளார்.