ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோவிடம் சம்பந்தன் அழுத்தம்
* படையினர் வசமுள்ள தமிழ் மக்களின்
காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்
* காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்
வடக்கு, கிழக்கில் நிறுவப்பட வேண்டும்
* தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து
சிறைகளில் அடைத்து வைத்திருக்க முடியாது
* நல்லிணக்க மற்றும் அரசியல் தீர்வு முயற்சிகளை
குழப்புவதற்கு ஒரு சிலர் பிரயத்தனம்
“நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றுவதை ஐ.நா. உறுதி செய்யவேண்டும். இந்த வாக்குறுதிகள் வெறுமனே எழுத்துருவில் மாத்திரம் இருக்கக்கூடாது.”
– இவ்வாறு ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப்பிடம் நேரில் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீளநிகழாமையை உத்தரவாதப்படுத்துவது தொடர்பான ஐ.நாவின் விசேட சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரீப்புக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று நண்பகல் கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றது.
காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் போன்ற விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஐ.நாவின் விசேட அறிக்கையாளரின்கவனத்திற்கு இரா.சம்பந்தன் கொண்டு வந்தார்.
இக்கலந்துரையாடலில் காணி விடுவிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், “எமது மக்கள் தமது காணிகள் தொடர்பில் வெறும் உணர்ச்சிக்கும் அப்பாலான இணைப்பைக் கொண்டுள்ளார்கள். இந்த மக்கள் சில பிரதேசங்களில் கடந்த 300 நாட்களுக்கும் அதிகமாக, படையினர் அபகரித்துவைத்துள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்” என்று கூறினார்.
மேலும், இவர்கள் மழையிலும் வெயிலிலுமாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என இந்தப் போராட்டங்களில் மிகவும் உறுதியாக உள்ளார்கள் எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்த விடயமானது மக்களின் உணர்வுகளோடும் அவர்களது உரிமைகளோடும் சம்பந்தப்பட்ட விடயம் என்பதை இலங்கை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய இரா.சம்பந்தன், உண்மையான புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டுமெனில் இந்த யதார்த்தம் புரிந்துகொள்ளப்பட வேண்டும் எனவும், எனவே, இந்த விடயங்கள் மேலும் தாமதமின்றி முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், “ஒரு தாய் தனது மகனை படையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ கையளித்திருந்தால் அவருக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்ளும் உரிமை உள்ளது. அந்த உரிமையை மறுக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் செயலாக்கம் தொடர்பில் காணப்படும் தாமதம் குறித்து தமது கரிசனையை வெளிப்படுத்திய இரா. சம்பந்தன், இந்த அலுவலகம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் நிறுவப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அரசியல் கைதிகள் தொடர்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், “இவர்கள் களவு செய்த காரணத்தினாலோ அல்லது தமது நன்மைக்காக சூறையாடிய காரணத்தினாலோ காவலில் இருக்கவில்லை. அரசியல் கைதிகள் ஒவ்வொருவரினதும் வழக்குகள் அரசியல் பரிணாமத்தைக் கொண்டுள்ளது. ஆகவே, இவை அந்த அடிப்படையில் நோக்கப்பட்டு முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும்” எனவும் தெரிவித்தார்.
மேலும், பயங்கரவாத தடைச் சட்டமானது மிகக் கேடானதும் இந்நாட்டு சட்ட புத்தகங்களில் இருந்து நீக்கப்பட வேண்டிய ஒன்றும் என அரசானது ஒப்புக்கொண்டுள்ளபோது, எந்த அடிப்படையில் அதே சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளைத் தொடர்ந்தும் சிறையில் வைத்திருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்த விடயங்களில் தவறிழைக்க முடியாது எனத் தெரிவித்த இரா.சம்பந்தன், அவ்வாறு தவறிழைக்கின்ற பட்சத்தில் அது நல்லிணக்கப் படிமுறைகளிலே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஒரு சிலர் நல்லிணக்க மற்றும் அரசியல் தீர்வு முயற்சிகளைக் குழப்புவதற்குத் தயாராக உள்ள நிலையில் இந்த விடயங்கள் அவர்களுக்குச் சாதகமாக இருப்பதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றுவதை ஐ.நா. உறுதி செய்யவேண்டும் என ஐ.நாவின் விசேட அறிக்கையாளரை வலியுறுத்திய இரா.சம்பந்தன், இந்த வாக்குறுதிகள் இலங்கை நாட்டினதும் அதன் மக்களின் நன்மையையும் கருத்தில்கொண்டு இலங்கை அரசால் தன்னார்வமாகக் கொடுக்கப்பட்டவை என்பதைச் சுட்டிக்காட்டிய அதேவேளை, அவற்றை இலங்கை அரசு மதித்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இவை வெறுமனே எழுத்துருவில் மாத்திரம் இருக்கக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினார்.
தனது இலங்கை விஜயத்தின் முடிவில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் தனது கருத்தை தெரிவிக்கவுள்ளதாகக் கூறிய ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ, இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், அரசியல் தீர்வை அடையும் வகையிலும் தனதும் ஐ.நாவினதும் தொடர்ச்சியான பங்களிப்பு இருக்கும் என்பதனையும் இந்தச் சந்திப்பில் வாக்குறுதியளித்தார்.