ரஷ்யாவைச் சென்றடைந்தார் மைத்திரி!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விஷேட அழைப்புக்கமைய ரஷ்யாவில் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மைத்திரிபால இன்று பிற்பகல் மொஸ்கோ நகர டொமொடேடுவா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
ரஷ்ய அரசின் சார்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளால் ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கைத் தூதுக்குழுவினர் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் முக்கிய நிகழ்வாக ஜனாதிபதி சிறிசேனவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பு நாளை பகல் மொஸ்கோ நகரில் கிரெம்ளின் மாளிகையில் நடைபெறவுள்ளது.
43 வருடங்களின் பின்னர் இது இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகும். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவர்களாலேயே அழைப்பு விடுக்கப்பட்டது சிறப்பம்சமாகும். இலங்கை ஜனாதிபதியை உயர் கௌரவத்துடன் வரவேற்க ரஷ்யா தயாராக உள்ளது.
இரு அரச தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின் பின்னர் இருதரப்பு பொருளாதார, வர்த்தக, அரசியல், பண்பாட்டு உறவுகளைப் பலப்படுத்தும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.
இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 வருடங்கள் நிறைவடைவதையிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்விலும் ஜனாதிபதி மைத்திரிபால கலந்துகொள்ளவுள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, வியாபார உறவுகளை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கை – ரஷ்ய வர்த்தக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொள்வதுடன், ரஷ்யாவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களுடனான சந்திப்பிலும் ஈடுபடவுள்ளார்.

