Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மறுபடியும் ஜனாதிபதியாக களமிறங்குவார் மைத்திரி! – 2020இல் தனியாட்சியே குறிக்கோள் என்கிறது சு.க.

மறுபடியும் ஜனாதிபதியாக களமிறங்குவார் மைத்திரி! – 2020இல் தனியாட்சியே குறிக்கோள் என்கிறது சு.க.

2020இல் தனியாட்சி அமைப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குறிக்கோளாக இருக்கின்றது என்றும், ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவே களமிறங்குவார் என்றும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய இரண்டுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகித்தார். எனினும், இரண்டு தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவினார்.

பொதுவேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரி கட்சியின் நலனைக் கருத்திற்கொண்டு தலைமைப் பொறுப்பை ஏற்றார். பெரும்பாலான தொண்டர்கள் தற்போது அவர் பக்கமே இருக்கின்றனர்.

அவர் ஜனாதிபதியானதால்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கேற்ப அமைச்சரவையிலும் அதற்கு வெளியிலும் முடிவுகளை எடுக்கக்கூடியதாக இருக்கின்றது. 42 உறுப்பினர்கள் இருக்கும்போது கம்பீரமாக செயற்பட முடிகின்றதென்றால், அனைத்து சு.க. உறுப்பினர்களும் ஒன்றிணைந்தால் அந்தச் சக்தி மேலும் வலுவடையும்.

கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரி கேட்டுப் பெறவில்லை. முன்னாள் சபாநாயகரின் வீட்டில் நடந்த கூட்டத்தின்போது மஹிந்த ராஜபக்ஷ விரும்பியே கொடுத்தார். அவ்வாறு வழங்கிவிட்டு இன்று காலைவாரிவிடுவதுபோல் செயற்படுவது ஏற்கக்கூடிய காரணமல்ல.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடமாட்டோம். மைத்திரியை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கும் தகுதியுள்ள வேட்பாளராக இருக்கின்றார்.

ஒருமுறைதான் போட்டியிடுவார் என்பது ஜனாதிபதி மைத்திரியின் தனிப்பட்ட கருத்தாகும். கட்சிக்காக சில முடிவுகளை எடுக்கநேரிரும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டாமென மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் விடயங்களை செய்யமாட்டார் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். ஆகவே, புதிய அரசமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் கைவைத்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படும். அதை ஜனாதிபதி செய்யமாட்டார்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …