ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
புதிய அரசமைப்பு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை பொது எதிரணி பக்கமிருக்கும் சு.க. உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையிலேயே, சு.கவின் மூத்த அமைச்சர்களின் மத்தியஸ்தத்துடன் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதன்போது இணைந்து பயணிக்க வருமாறு மஹிந்த அணியான பொது எதிரணிக்கு ஜனாதிபதி மைத்திரி அழைப்பு விடுக்கவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
மஹிந்தவுக்குச் சார்பாகச் செயற்பட்டுவரும் தொகுதி அமைப்பாளர்களிடமிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிகளைப் பறித்ததால் இந்தச் சந்திப்பு நடைபெறாது என்றே முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சிரேஷ்ட உறுப்பினர்கள் தலையிட்டதால் அது திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, இந்தச் சந்திப்பில் இணக்கம் எதையும் எட்டமுடியாவிட்டால் இனிவரும் நாட்களில் மைத்திரி, மஹிந்த சந்திப்பு என்பது சாத்தியப்படாததொன்றாகவே இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.